தேசிய செய்திகள்

மாவோயிஸ்டு ஆதரவாளர்கள் 5 பேர் கைது உள்துறை அமைச்சகத்திற்கு மராட்டிய அரசு விளக்கம்

மாவோயிஸ்டு ஆதரவாளர்கள் 5 பேர் கைது தொடர்பாக உள்துறை அமைச்சகத்திற்கு மராட்டிய அரசு விளக்கம் அளித்துள்ளது.

தினத்தந்தி

புதுடெல்லி,

மராட்டிய மாநிலம் புனேவில் கடந்த ஆண்டு டிசம்பர் 31-ந் தேதி, இடதுசாரி ஆதரவாளர்கள் ஒரு மாநாடு நடத்தினர். அதில் பேசியவர்கள், ஆவேசமாக பேசினர். அதைத்தொடர்ந்து, அம்மாநிலத்தின் கோரேகான்-பீமா கிராமத்தில் வன்முறை வெடித்தது. மராத்தா சமூகத்தினரும், தலித் சமூகத்தினரும் மோதிக் கொண்டனர். வன்முறையை தூண்டும்வகையில் பேசியதாக கடந்த ஜூன் மாதம் 5 பேர் கைது செய்யப்பட்டனர்.

அவர்களில் டெல்லியில் பிடிபட்ட ஒருவரிடம் கைப்பற்றப்பட்ட கடிதத்தில், ராஜீவ் காந்தி கொலை பாணியில், பிரதமர் மோடியை கொலை செய்வோம் என்று மாவோயிஸ்டுகள் எழுதி இருந்தனர். இதன்மூலம், மோடியை கொல்ல மாவோயிஸ்டுகள் சதித்திட்டம் தீட்டி இருப்பது தெரியவந்தது. அந்த கடிதத்தில், ஐதராபாத்தை சேர்ந்த புரட்சிகர இடதுசாரி எழுத்தாளர் பி.வரவர ராவின் பெயர் இருந்தது. இந்நிலையில், அவரை கைது செய்ய புனே போலீசார், நேற்று ஐதராபாத்துக்கு வந்தனர். ஐதராபாத் போலீசாரின் ஒத்துழைப்புடன், வரவர ராவின் மருமகனும், மூத்த பத்திரிகையாளருமான கே.வி.குர்மாநாத், புகைப்பட நிபுணர் கிராந்தி ஆகியோர் வீடுகளில் அதிரடி சோதனை நடத்தினர்.

பின்னர், வரவர ராவின் வீட்டுக்கு சென்று அவரை கைது செய்தனர். அவரை ஐதராபாத் கோர்ட்டில் ஆஜர்படுத்திவிட்டு, புனேவுக்கு அழைத்து சென்றனர். இதுபோல், மாவோயிஸ்டு ஆதரவாளர்களை குறிவைத்து தெலுங்கானா, மராட்டியம், அரியானா, ஜார்கண்ட், டெல்லி, கோவா, சத்தீஷ்கார் என மொத்தம் 7 மாநிலங்களில் ஒரே நேரத்தில் சோதனை நடத்தப்பட்டது. அரியானா மாநிலம் பரிதாபாத்தில் நடந்த சோதனையில், இடதுசாரி சிந்தனையாளரும், வக்கீலுமான சுதா பரத்வாஜ் கைது செய்யப்பட்டார்.

மும்பையில் நடந்த சோதனையில், மாவோயிஸ்டு ஆதரவாளர்கள் வெர்னன் கோன்சல்வ்ஸ், அருண் பெரேரா, டெல்லியில் நடந்த சோதனையில் சிவில் உரிமை ஆர்வலர் கவுதம் நவலகா ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இந்த நடவடிக்கைகளுக்கு, காங்கிரஸ் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது. அக்கட்சியின் செய்தித்தொடர்பாளர் ஜெய்பால் ரெட்டி கூறுகையில், இந்த கைதை கண்டிக்கிறோம். உரிய குற்றச்சாட்டு இல்லாமல், எந்த மனித உரிமை ஆர்வலரையும் கைது செய்யக்கூடாது என்றார். மேலும், பெண் எழுத்தாளர் அருந்ததி ராய், பிரபல வரலாற்று ஆய்வாளர் ராமச்சந்திர குகா உள்ளிட்டோர் மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இவ்விவகாரம் தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் வழக்கும் தொடரப்பட்டுள்ளது. இதற்கிடையே ஐவர் கைது செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு மராட்டிய மாநில அரசு விளக்கமளித்துள்ளது. புலனாய்வு அமைப்புகள் கொடுத்த தகவல்களின்படியே கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என மராட்டிய மாநில அரசு தெரிவித்துள்ளது. மராட்டிய உள்துறை அமைச்சர் தீபக் கேசர்கார் பேசுகையில், ஆதாரங்கள் இல்லாமல் போலீஸ் நடவடிக்கையை எடுக்காது. ஆதாரம் கோர்ட்டில் சமர்பிக்கும் போது நீதிமன்றம் காவலில் அனுப்பும். அவர்கள் எப்படி நக்சலிசத்திற்கு உதவுகிறார்கள் என்பது தொடர்பாக எங்களிடம் ஆதாரம் உள்ளது. அவர்கள், அவர்களுக்கென்று தனி அரசை இயக்குகிறார்கள், இது எப்படி ஜனநாயகத்திற்கு சிறந்ததாக இருக்கும்? என கேள்வியை எழுப்பியுள்ளார்.

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு