புதுடெல்லி,
சவுதி அரேபியாவின் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் (வயது 33), நேற்று முன்தினம் மாலை டெல்லி வந்தார். பிரதமர் நரேந்திர மோடி ஒரு சிறப்பு நிகழ்வாக, மரபை மீறி விமான நிலையத்துக்கு சென்று அவரை அன்புடன் வரவேற்றார்.
ஜனாதிபதி மாளிகையில் அவருக்கு சம்பிரதாய ரீதியிலான வரவேற்பு நேற்று அளிக்கப்பட்டது. இதில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் நரேந்திர மோடி மற்றும் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
அந்த வரவேற்பை தொடர்ந்து பேசிய இளவரசர் முகமது பின் சல்மான், இரு நாடுகளும் மிகப்பழமையான உறவுகளை வைத்துள்ளோம். இன்று (நேற்று) நம் இரு நாடுகளின் நலன்களையொட்டி, அந்த உறவு தொடர்ந்து நீடிக்கவும், வலுப்படுத்தவும் உறுதிப்படுத்த வேண்டும் என்று விரும்புகிறோம். இந்தியாவுக்கும், சவுதி அரேபியா 80 சதவீதம் பங்களிப்பு செய்யும் அரேபிய தீபகற்பத்துக்கும் இடையே 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே, வரலாறு எழுதப்படுவதற்கு முன்பே உறவு உண்டு என குறிப்பிட்டார்.
வலதுபக்கம் பிரதமர் மோடியும், இடப்பக்கம் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தும் உடனிருந்த போது இளவரசர் முகமது பின்சல்மான் உற்சாகத்துடன், இந்தியாவுக்கும், சவுதி அரேபியாவுக்கும் இடையேயான உறவு, நமது மரபணுவில் உள்ளது என்று குறிப்பிட்டார். அப்போது பிரதமர் மோடியும் உடனடியாக, ஆமாம், ஆமாம் என கூறி ஆமோதித்தார்.
பின்னர் பிரதமர் நரேந்திர மோடியும், இளவரசர் முகமது பின்சல்மானும் இரு தரப்பு பேச்சுவார்த்தை நடத்தினர். காஷ்மீரில் புலவாமா மாவட்டத்தில் பாகிஸ்தானின் ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத அமைப்பினர் நடத்திய கார் குண்டு தாக்குதலில் துணை ராணுவ வீரர்கள் 40 பேர் கொல்லப்பட்ட நிலையில், இந்த பேச்சுவார்த்தை முக்கியத்துவம் பெற்றது.
இந்த பேச்சுவார்த்தையில் பயங்கரவாதத்தை ஒழித்துக்கட்டுவது, இந்திய சவுதி அரேபிய ராணுவ உறவை வலுப்படுத்துவது உள்ளிட்ட பல விஷயங்கள் இடம் பெற்றன.
பேச்சுவார்த்தைக்கு பின்னர் பிரதமர் மோடியும், இளவரசர் முகமது பின் சல்மானும் கூட்டாக நிருபர்களை சந்தித்தனர்.
பிரதமர் மோடி பேசும்போது, கடந்த வாரம் புலவாமாவில் நடந்த காட்டுமிராண்டித்தனமான தாக்குதல், உலகளாவிய மனிதநேயமற்ற ஆபத்தின் அடையாள சின்னம். பயங்கரவாதத்துக்கு எந்த வகையிலான ஆதரவையும் வழங்குகிற நாடுகளுக்கும் நிர்ப்பந்தம் தருவது அவசியம் என்று நாங்கள் ஒப்புக்கொண்டுள்ளோம் என கூறினார்.
தொடர்ந்து, பயங்கரவாத கட்டமைப்புகளை கலைப்பது, பயங்கரவாத ஆதரவை ஒழிப்பது, பயங்கரவாதிகளையும், அவர்களது ஆதரவாளர்களையும் தண்டிப்பது மிகவும் அவசியமான ஒன்று என்றும் மோடி குறிப்பிட்டார்.
சவுதி அரேபிய பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் பேசும்போது, பயங்கரவாதத்தை பொறுத்தமட்டில் பொதுவான கவலை உள்ளது. பயங்கரவாதத்தை ஒழிப்பதில், உங்களுக்கு தேவையான அனைத்து ஒத்துழைப்பையும் நாங்கள் தருவோம் என்று இந்தியாவுக்கு கூறிக்கொள்கிறேன். இந்தியாவோடு மட்டுமின்றி அண்டை நாடுகளுடனும் உளவுத்தகவல்களை பகிர்ந்து கொள்வோம். நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயல்படுவோம். அப்போதுதான் இனிவரும் தலைமுறையினருக்கு பிரகாசமான எதிர்காலத்தை நாம் உறுதி செய்ய முடியும் என்று கூறினார்.
பிரதமர் மோடி குறிப்பிடும்போது, பயங்கரவாதத்தை எதிர்த்து போரிடுவதில் ஒரு வலுவான செயல் திட்டத்தை உருவாக்க வேண்டும். அப்போதுதான் அந்த சக்திகள், இளைய தலைமுறையினரை தவறாக வழிநடத்த முடியாது எனவும் குறிப்பிட்டார்.
மேலும், மரபுசாரா எரிசக்தி துறையில் சவுதி அரேபிய ஒத்துழைப்பை வலுப்படுத்த நாங்கள் ஒப்புக்கொண்டுள்ளோம். சர்வதேச சூரிய சக்தி கூட்டணிக்கு சவுதி அரேபியாவை வரவேற்கிறோம். அமைதியான வழியில் அணுசக்தி பயன்பாடு, தண்ணீரில் உப்பு நீக்குதல், சுகாதாரம் உள்ளிட்டவை நமது ஒத்துழைப்பின் இன்னொரு பரிமாணமாக இருக்கும் என்றும் குறிப்பிட்டார்.
இரு தரப்பிலும் 5 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.
* தேசிய முதலீடு மற்றும் உள்கட்டமைப்பு நிதியத்தில் முதலீடு செய்வது தொடர்பான இரு தரப்பு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் மத்திய வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜ், சவுதி அரேபிய எரிசக்தி, தொழில், தாது வளத்துறை மந்திரி காலித் அல் பாலிஹ் ஆகியோர் கையெழுத்திட்டனர்.
* சுற்றுலாத்துறையில் ஒத்துழைப்பு அளிக்கும் வகையில் மத்திய சுற்றுலாத்துறை அமைச்சகத்துக்கும், சவுதி சுற்றுலா மற்றும் தேசிய பாரம்பரிய ஆணையத்துக்கும் இடையே ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.
* வீட்டு வசதித்துறை தொடர்பான ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் சவுதி அரேபியாவுக்கான இந்திய தூதர் அகமது ஜாவத்தும், சவுதி வர்த்தக மந்திரி மஜித் பின் அப்துல்லா அல் கசாபியும் கையெழுத்திட்டனர்.
* இரு தரப்பு முதலீட்டு உறவுகளை வலுப்படுத்தும் விதத்தில் ஒத்துழைப்பு வழங்க இன்வெஸ்ட் இந்தியா, சவுதி அரேபிய பொது முதலீட்டு ஆணையம் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன.
* ஒலிபரப்பில் ஒத்துழைப்பு வழங்குவதற்காக பிரசார்பாரதிக்கும், சவுதி ஒலிபரப்பு கார்ப்பரேசனுக்கும் இடையே ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.