தேசிய செய்திகள்

தடுப்பூசி தயாரிக்கும் புனேவில் உள்ள சீரம் இந்தியா நிறுவனத்தில் தீ விபத்து; 5 பேர் பலி

தடுப்பூசி தயாரிக்கும் புனேவில் உள்ள சீரம் இந்தியா நிறுவனத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. தடுப்பூசி உற்பத்தி பிரிவு பாதுகாப்பாக உள்ளது. 5 பேர் உயிரிழந்ததாக உரிமையாளர் ஆதார் பூனவல்லா தகவல் தெரிவித்து உள்ளார்.

மும்பை,

புனேவில் உள்ள சீரம் இந்தியா நிறுவனத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இங்கு தான் கோவிஷீல்டு கொரோனா தடுப்பூசி மருந்து உற்பத்தி செய்யப்படுகிறது. இதனால் உற்பத்தியில் பாதிப்பு இல்லை என அந்நிறுவனம் தெரிவித்து உள்ளது.

சீரம் நிறுவனம்

இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம், அஸ்ட்ரா ஜெனேகா மருந்து நிறுவனத்துடன் கூட்டாக உருவாக்கி, புனே இந்திய சீரம் நிறுவனம் கோவிஷீல்டு தடுப்பூசியை தயாரித்து வழங்குகிறது.

இந்த தடுப்பூசியின் அவசரகால பயன்பாட்டு ஒப்புதலை இந்திய தலைமை மருந்து கட்டுப்பாட்டு இயக்குனரகம் கடந்த 3-ந் தேதி அளித்தது. ஐதராபாத் பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவேக்சின் தடுப்பூசிக்கும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

அதை தொடர்ந்து தடுப்பூசி போடும் பணி 16-ந் தேதி நாடு முழுவதும் தொடங்கி உள்ளது.

தீ விபத்து

புனேயில் உள்ள இந்திய சீரம் நிறுவனம் தயாரித்து வழங்கும் கோவிஷீல்டு தடுப்பூசி இந்தியா முழுவதும் போடப்பட்டு வருகிறது. பூட்டான், நேபாளம், மலைத்தீவு உள்ளிட்ட நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது.

இந்நிலையில் சீரம் நிறுவனத்தில் இன்று திடீரென தீ விபத்து ஏற்பட்டது. நுழைவு வாயிலில் உள்ள ஒரு கட்டிடத்தின் நான்காவது மற்றும் ஐந்தாவது மாடியில் தீ விபத்து ஏற்பட்டு மளமளவென பரவியது. கொரோனா தடுப்பூசி உற்பத்தி பிரிவு பாதுகாப்பாக உள்ளது. தீவிபத்து ஏற்பட்ட பகுதி ரோட்டா வைரஸ் உற்பத்தி பகுதியாகும். உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர். தகவலின்பேரில் விரைந்து வந்த தீயணைப்பு அதிகாரிகள் 10- மேற்பட்ட தீயணைப்பு வாகனங்கள் மூலம் தண்ணீரை பீய்ச்சி அடித்து பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

ஆனால் இந்த தீவிபத்தில் 5 பேர் பலியானதாக கூறப்படுகிறது. அவர்கள் அங்கு கட்டுமான பணியில் ஈடுபட்டு இருந்தவர்கள் என கூறப்படுகிறது. தீக்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை, ஆனால் கட்டிடத்தில் நடந்து கொண்டிருந்த வெல்டிங் தீ விபத்துக்கான காரணம் என்று ஊகிக்கப்படுகிறது.

புனே மேயர் முர்லிதர் மோஹல் கூறும் போது நான்கு பேர் கட்டிடத்திலிருந்து வெளியேற்றப்பட்டனர், ஆனால் கட்டிடம் எங்கள் கட்டுப்பாட்டுக்குள் வந்தபோது, ஐந்து உடலகள் அங்கிருந்து மீடகப்பட்டன என கூறினார்.

5 பேர் பலி

சீரம் நிறுவன உரிமையாளரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான ஆதார் பூனவல்லா, தடுப்பூசி உற்பத்தி ஆலையில் நடந்த சம்பவத்தை உறுதிப்படுத்தினார்.

கொரோனா தடுப்பூசி உற்பத்தி பிரிவு பாதுகாப்பாக இருப்பதாக கூறி உள்ளார்.

உங்கள் அக்கறை மற்றும் பிரார்த்தனைகளுக்கு அனைவருக்கும் நன்றி. இதுவரை மிக முக்கிய விஷயம் என்னவென்றால், உயிர் இழப்புகள் இல்லை என தனது டுவிட்டர் பக்கத்தில் கூறி இருந்தார்.

அடுத்து அவரது டுவிட்டில்

சில துன்பகரமான புதிய தகவல்களை நாங்கள் பெற்றுள்ளோம்; மேலதிக விசாரணையில், துரதிர்ஷ்டவசமாக இந்த சம்பவத்தில் உயிர் இழப்பு ஏற்பட்டுள்ளது என்பதை நாங்கள் அறிந்தோம். நாங்கள் மிகுந்த வருத்தத்தில் இருக்கிறோம், மரணமடைந்தவர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு எங்கள் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம் என கூறி உள்ளார்.

தீ கட்டுக்குள் உள்ளது என்று மராட்டிய முதல்வர் உத்தவ் தாக்கரே தெரிவித்து உள்ளார். கொரோனா தடுப்பூசி பிரிவில் தீ விபத்து ஏற்படவில்லை. தீ விபத்தில் இருந்து 6 பேர் மீட்கப்பட்டுள்ளனர் என்று தாக்கரே கூறினார்.

கடந்த ஆண்டில் 18 ஆயிரம் முகாம்கள் மூலம் 2.22 கோடி பேருக்கு வேலை - மத்திய அரசு தகவல்

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...