புதுடெல்லி,
சுப்ரீம் கோர்ட்டில் வக்கீல் எம்.எல்.சர்மா தாக்கல் செய்த பொதுநல மனுவில், மேற்கு வங்காளத்தில் 8 கட்டமாக சட்டப்பேரவை தேர்தல் நடத்தப்படும் என்ற தேர்தல் ஆணைய முடிவுக்குத் தடை விதிக்க வேண்டும்.
தமிழகம் உள்ளிட்ட 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தலை ரத்து செய்ய வேண்டும். தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட பிரதமருக்குத் தடை விதிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்திருந்தார்.
இந்த மனு, சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டே தலைமையிலான அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது. தேர்தல் ஆணையத்தின் சார்பில் மூத்த வக்கீல் ஹரீஷ் சால்வே ஆஜரானார். மனுவை பரிசீலித்த நீதிபதிகள் ஐகோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்யுங்கள் என தெரிவித்தார்.
இதற்கு மனுதாரர் வக்கீல் எம்.எல்.சர்மா, இது தேர்தல் வழக்கு இல்லை. எனவே, ஐகோர்ட்டில் வழக்கு தொடர முடியாது என சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பை சுட்டிக்காட்டினார்.
மேலும், தேர்தல் பிரசாரத்தில் மத நல்லிணக்கம் சீரழிக்கப்படுவதை தடுக்க வேண்டும். சட்டப்பேரவையை கலைக்காமல் தேர்தல் நடத்த தேர்தல் ஆணையத்துக்கு அதிகாரம் இல்லை. ஆளுங்கட்சி தேர்தலில் தோற்றால் ஆட்சியில் தொடர முடியாது என வாதிட்டார்.
அந்த வாதத்தை ஏற்க மறுத்த நீதிபதிகள், காணொலி விசாரணையைத் தொடரக்கோரி நீங்கள் தாக்கல் செய்த மனுவின் நோக்கம் உயர்ந்ததாக உள்ளது என தெரிவித்தோம். ஆனால் இந்த வழக்கில் அப்படி தெரிவிக்க முடியாது. ஐகோர்ட்டில் வழக்குத் தொடர முடியாது என எந்த வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பளித்துள்ளது என கேட்டதுடன், மனுவைத் தள்ளுபடி செய்வதாக அறிவித்தனர்.