வாரணாசி,
பிரதமர் நரேந்திர மோடி இரண்டு நாள் பயணமாக உத்தர பிரதேச மாநிலத்திற்கு சென்றுள்ளார். அங்கு லக்னோசுல்தான்பூர் தேசிய நெடுஞ்சாலையில் சண்ட் சரை கிராமத்தில் இருந்து காஜிபூர் மாவட்டத்தின் ஹைதரியா கிராமம் வரை 340 கி.மீ. தொலைவுக்கு பூர்வாஞ்சல் விரைவுச்சாலை அமைக்கப்படுகிறது. ரூ.23 ஆயிரம் கோடி செலவில் அமைக்கப்படும் இந்த சாலைக்கான அடிக்கல் நாட்டு விழா நேற்று அசம்காரில் நடந்தது.
இந்த விழாவில் பிரதமர் நரேந்திர மோடி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, சாலைக்கான அடிக்கல்லை நாட்டி வைத்து பேசினார்.
அப்போது அவர் கூறுகையில், இந்த விரைவுச் சாலையோரத்தில் புதிய நிறுவனங்கள், தொழிற்சாலைகள் தொடங்குவதற்கு நல்ல வாய்ப்பு ஏற்பட்டு உள்ளது. இதன் மூலம் சாலை செல்லும் இடமெல்லாம் நகரங்கள் வளர்ச்சி காணும். இந்த சாலை மூலம் டெல்லிகாஜிப்பூர் இடையே வேகமாக பயணிக்க முடியும். இந்த விரைவுச் சாலை சுற்றுலாத்துறையையும் மேம்படுத்தும் என்றார்.
மேலும் நாட்டின் வளர்ச்சிக்கு முட்டுக்கட்டை போட குடும்பக்கட்சிகள் முயற்சி செய்து வருவதாக குற்றம்சாட்டினார். இஸ்லாமியப் பெண்களின் வாழ்க்கையை வளமாக்குவதற்காக இயற்றப்பட்ட முத்தலாக் முறை ரத்து மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்ததன் மூலம், எதிர்க்கட்சிகளின் உண்மையான முகம் வெளிப்பட்டுவிட்டதாக மோடி விமர்சித்தார். 50 ஆண்டு கால பணிகளை பாஜக ஆட்சி, கடந்த 4 ஆண்டுகளில் முடித்துள்ளதாக பிரதமர் நரேந்திரமோடி பெருமிதம் தெரிவித்தார்.