ஜம்மு,
ஜம்மு மற்றும் காஷ்மீரின் சட்டசபையில் தேசிய மாநாட்டு கட்சியின் எம்.எல்.ஏ. ஒருவர் எழுப்பிய கேள்விக்கு முதல் மந்திரி மெஹ்பூபா முப்தி அளித்துள்ள எழுத்துப்பூர்வ பதிலில், காஷ்மீரில் கடந்த 2016ம் ஆண்டு ஜூலை 8ல் இருந்து 2017ம் ஆண்டு பிப்ரவரி 27 வரை தொடர்ந்து நடந்து வந்த வன்முறையில் 51 பேர் கொல்லப்பட்டு உள்ளனர் என கூறியுள்ளார்.
தொடர்ந்து அவர், துப்பாக்கி குண்டுகள், பெல்லட்டுகள், பாவா ஷெல்கள் மற்றும் பிற காரணங்களால் 9,042 பேர் காயமடைந்து உள்ளனர். அவர்களில் 6,221 பேர் பெல்லட்டுகளாலும், 368 பேர் துப்பாக்கி குண்டுகளாலும், 4 பேர் பாவா ஷெல்களாலும் மற்றும் 2,449 பேர் பிற காரணங்களாலும் காயம் அடைந்துள்ளனர் என தெரிவித்துள்ளார்.
பெல்லட்டுகளால் காயமடைந்த 5,197 பேர் மாவட்ட மருத்துவமனைகளிலும் மற்றும் பிறர் சிறப்பு மருத்துவமனைகளிலும் சிகிச்சை பெற்றனர். 782 பேருக்கு கண்களில் காயம் ஏற்பட்டுள்ளது. அவர்களில் 510 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர்.
காஷ்மீரில் அதிக அளவில் அன்ந்த்நாக் மாவட்டத்தில் 16 பேரும், குல்காம் மாவட்டத்தில் 13 பேரும், புல்வாமாவில் 7 பேரும் மற்றும் குப்வாராவில் 5 பேரும் கொல்லப்பட்டு உள்ளனர் என முப்தி தெரிவித்துள்ளார்.
#BurhanWani | #JammuandKashmir