பெங்களூரு:-
போலீசார் பற்றாக்குறை
கர்நாடகத்தில் கடந்த 2013-18-ம் ஆண்டு வரையிலான காங்கிரஸ் ஆட்சியில் முதல்-மந்திரியாக இருந்த சித்தராமையா லோக் அயுக்தா அமைப்பின் அதிகாரத்தை குறைத்துவிட்டு, ஊழல் தடுப்பு படையை உருவாக்கி இருந்தார். கடந்த பா.ஜனதா ஆட்சியில் ஊழல் தடுப்பு படையை ஐகோர்ட்டு ரத்து செய்திருந்தது. இதையடுத்து, லோக் அயுக்தாவுக்கு மீண்டும் முழு அதிகாரத்தை அரசு வழங்கி இருந்தது.
அதன்படி, லோக் அயுக்தா எப்போதும் போல் செயல்பட்டு வருவதுடன் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்து வரும் அரசு அதிகாரிகள் மீது சோதனை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில், லோக் அயுக்தாவில் பணியாற்ற போலீசார் இல்லாமல் இருப்பது தெரியவந்துள்ளது. போலீசார் பிற ஊழியர்கள் பற்றாக்குறையால் லோக் அயுக்தாவில் பல்வேறு பணிகள் நடைபெறாமல் கிடப்பில் போடப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது.
அரசு பதில் அளிக்கவில்லை
அதாவது லோக் அயுக்தாவில் ஒட்டு மொத்தமாக 1,732 பணி இடங்கள் உள்ளது. அவற்றில் 1,142 பணி இடங்கள் நிரப்பட்டு போலீசார், ஊழியர்கள், அதிகாரிகள் பணியாற்றி வருகின்றனர். ஆனாலும் 590 பணி இடங்கள் இன்னும் காலியாக உள்ளது. அந்த பணி இடங்கள் நிரப்பப்படாமல் அரசு இருந்து வருகிறது. இவற்றில் 8 போலீஸ் சூப்பிரண்டுகள், 9 துணை போலீஸ் சூப்பிரண்டுகள் உள்பட உயர் போலீஸ் அதிகாரிகள் பணி இடங்கள் கூட காலியாக இருப்பது தெரியவந்துள்ளது.
நேரத்தில் லோக் அயுக்தாவுக்கு 700 போலீசார், ஊழியர்கள் தேவை என்று கூறி
அரசுக்கு லோக் அயுக்தா நீதிபதி பி.எஸ். பட்டீல் கடிதம் எழுதி இருந்தார். அந்த கடிதத்தில் அரசிடம் இருந்து இதுவரை எந்த பதிலும் வரவில்லை என்றும் லோக் அயுக்தா அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
590 பணி இடங்கள் காலி
இதுகுறித்து லோக் அயுக்தா நீதிபதி பி.எஸ். பட்டீல் கூறும் போது, லோக் அயுக்தா அமைப்பில் இருக்கும் காலி பணிஇடங்களை நிரப்பவும், தேவையான போலீசாரை வழங்கும்படியும் அரசிடம் கேட்டுள்ளோம். அரசும், லோக் அயுக்தாவுக்கு தேவையான அதிகாரிகளை வழங்குவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது.
அந்த பணிகளை அரசு விரைந்து முடிக்க வேண்டும். இனியும் லோக் அயுக்தாவுக்கு போலீசாரை வழங்காமல் அரசு காலம் தாழ்த்த கூடாது. ஏனெனில் தற்போது 590 பணி இடங்கள் லோக் அயுக்தாவில் நிரப்பபடாமல் காலியாக உள்ளது. லோக் அயுக்தாவில் போலீசார் பற்றாக்குறை இருப்பது உண்மை தான், என்றார்.