சிலிகுரி,
மேற்கு வங்காள சட்டசபைக்கான தேர்தல் 8 கட்டங்களாக அறிவிக்கப்பட்டு இதுவரை 4 கட்ட தேர்தல்கள் நடந்து முடிந்துள்ளன. நாளை 5வது கட்ட தேர்தல் நடைபெற உள்ளது. மொத்தம் 45 சட்டசபை தொகுதிகளுக்கான தேர்தலில் 39 பெண்கள் உள்பட 319 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.
தேர்தல் ஜல்பைகுரி, கலிம்போங், டார்ஜிலிங், நாடியா, வடக்கு 24 பர்கானாஸ் மற்றும் புர்பா வர்தமான் ஆகிய 6 மாவட்டங்களில் நடக்கிறது. மேற்கு வங்காளத்தில் 5வது கட்ட தேர்தலுக்கான பிரசாரம் கடந்த புதன்கிழமை முடிவடைந்தது.
இதனையடுத்து நாளை 5வது கட்ட தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான முன்னேற்பாடுகளை தேர்தல் ஆணையம் செய்துள்ளது. தேர்தலை முன்னிட்டு பணம், மதுபானம், போதை பொருட்கள், இலவச பொருட்கள் என மேற்கு வங்காளத்தில் நேற்று வரை மொத்தம் ரூ.300.11 கோடியளவுக்கு பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன.
இதனை தொடர்ந்து தேர்தல் நடைபெறவுள்ள சிலிகுரி உள்ளிட்ட பகுதிகளில் போலீசார் தீவிர இரவு வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்கள் கொண்டு செல்லும் பணம், நகை உள்ளிட்டவற்றுக்கு உரிய ஆவணங்கள் உடன் எடுத்து செல்லப்படுகின்றனவா? என்பது பற்றியும் சோதனையில் ஈடுபட்டுள்ள போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.