மங்களூரு,
தட்சிண கன்னடா மாவட்டம் மங்களூரு பஜ்பே பகுதியில் சர்வதேச விமான நிலையம் அமைந்துள்ளது. இந்த நிலையில் நேற்று காலை மங்களூரு விமான நிலையத்துக்கு சார்ஜாவில் இருந்து ஒரு விமானம் வந்தது. அந்த விமானத்தில் வந்த பயணிகளையும், அவர்களின் உடைமைகளையும் சுங்கத்துறையினர் சோதனை செய்தனர். அப்போது ஒரு பயணியின் நடவடிக்கையில் சுங்கத்துறையினருக்கு சந்தேகம் எழுந்தது.
இதனால் சுங்கத்துறை அதிகாரிகள் அந்த பயணி மற்றும் அவருடைய உடைமையை சோதனை செய்தனர். அப்போது அவர், தனது உடைமைக்குள் மறைத்து வைத்து தங்கம் கடத்தி வந்தது தெரியவந்தது.
இதுகுறித்து சுங்கத்துறை அதிகாரிகள் அந்த பயணியிடம் விசாரணை நடத்தினார்கள். அப்போது அவர், மங்களூரு அருகே கசபா பைங்கெரே பகுதியை சேர்ந்த முகமது ஹர்ஷத் என்பதும், அவர் சார்ஜாவில் இருந்து தங்கம் கடத்தி வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து அவரிடம் இருந்து ரூ.31.73 லட்சம் மதிப்பிலான 664 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்தனர்.
பின்னர் சுங்கத்துறை அதிகாரிகள் அந்த நபரை பிடித்து பஜ்பே போலீசில் ஒப்படைத்தனர். இதுகுறித்து பஜ்பே போலீசார் வழக்குப்பதிவு செய்து முகமது ஹர்ஷத்தை கைது செய்தனர். மேலும் அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இதேபோல, நேற்று முன்தினம் சார்ஜாவில் இருந்து மங்களூருவுக்கு ஒரு விமானம் வந்தது. அந்த விமானத்தில் வந்த பயணிகளையும், அவர்களது உடைமைகளையும் சுங்கத்துறையினர் சோதனை செய்தனர். அப்போது, ஒரு பயணி தனது உடைமைக்குள் மறைத்து வைத்து கடத்தி வந்த ரூ.5.84 லட்சம் மதிப்பிலான 120 கிராம் தங்கத்தை சுங்கத்துறையினர் பறிமுதல் செய்தனர்.
மேலும், மற்றொரு பயணி கடத்தி வந்த ரூ.1.71 லட்சம் மதிப்பிலான அழகு சாதன பொருட்களையும் சுங்கத்துறையினர் பறிமுதல் செய்தனர். அந்த 2 பயணிகளையும் பஜ்பே போலீசாரிடம் சுங்கத்துறையினர் ஒப்படைத்தனர். அவர்கள் 2 பேரிடமும் பஜ்பே போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.