லக்னோ,
உத்தரப்பிரதேச மாநிலம் அம்ரோஹா மாவட்டம் வன்கேடா கிராமத்தில் உள்ள பள்ளியின் ஆசிரியராக இருந்தவர் சவுகத் அலி. இவரது மகள் ஷப்னம். பட்டதாரியான ஷப்னம், படிக்காத கூலித்தொழிலாளியான சலீம் என்பவரை காதலித்து வந்துள்ளார்.
இவர்கள் திருமணத்துக்கு ஷப்னமின் பெற்றோர் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்த நிலையில், கடந்த 2008ம் ஆண்டு ஏப்ரல் 15ந்தேதி ஷப்னமின் ஒட்டு மொத்த குடும்பமும் கொலை செய்யப்பட்டு கிடந்தது.
அடையாளம் தெரியாத சிலர், ஷப்னமின் ஒட்டுமொத்த குடும்பத்தினரையும் கொன்று குவித்து விட்டு சென்றதாக ஷப்னம் போலீசாரிடம் கூறினார். ஆனால் போலீசாரின் விசாரணையில், இந்த கொலையில், ஷப்னம் மற்றும் அவரது காதலன் சலீமும் ஈடுபட்டது தெரிய வந்தது.
குடும்பத்தினர் அனைவருக்கும் உணவில் தூக்க மாத்திரை கலந்து கொடுத்து, அனைவரும் உறங்கிய பிறகு, சலீமை வரவழைத்து பெற்றோர் உள்பட குடும்ப உறுப்பினர்கள் அனைவரையும் கழுத்தறுத்து கொன்று குவித்துள்ளார். தனது வீட்டிலிருந்த மிக சிறிய குழந்தையை கூட ஷப்னம் விட்டு வைக்கவில்லை. 10 மாத குழந்தையையும் கொன்றுள்ளார்.
இந்த வழக்கில் கடந்த 2010ம் ஆண்டு ஜூலை 14ல் மாவட்ட அமர்வு நீதிமன்றம் இருவருக்கும் மரண தண்டனை விதித்தது. கடந்த 2010ம் ஆண்டில், அலகாபாத் ஐகோர்ட்டில் இருவரும் மேல் முறையீடு செய்தனர். ஐகோர்ட்டும் மரண தண்டனையை உறுதி செய்தது.
கடந்த 2015ம் ஆண்டு அவர்களது தூக்கு தண்டனையை சுப்ரீம் கோர்ட்டும் உறுதி செய்தது. ஷப்னம் ஜனாதிபதிக்கு அனுப்பிய கருணை மனுவும் நிராகரிக்கப்பட்டது. இதனையடுத்து அவருக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட உள்ளது. 150 ஆண்டுகள் பழமையான மதுராவில் உள்ள சிறையில் தூக்கு தண்டனை நிறைவேற்றப்படும் என கூறப்படுகிறது. எனினும், அவரது தூக்கு தண்டனைக்கான நாள் மற்றும் நேரம் பற்றி அம்ரோகா நீதிமன்றம் விவரங்களை இதுவரை வெளியிடவில்லை.
இந்நிலையில், உத்தர பிரதேச ஆளுநர் ஆனந்திபென் பட்டேலுக்கு ஷப்னம் புதிய கருணை மனுவை இன்று அனுப்பி உள்ளார். கடந்த முறை அனுப்பிய கருணை மனுவை பட்டேல் நிராகரித்து விட்டார். எனினும் மற்றொரு முயற்சியாக புதிய மனுவை ஷப்னம் அனுப்பி உள்ளார்.
ஷப்னமின் உறவினர்களான சத்தார் அலி மற்றும் பாத்திமா இருவரும் கூறும்பொழுது, தங்களது மருமகள் மீது இரக்கம் எல்லாம் இல்லை. ஷப்னம், சலீம் இருவரையும் தூக்கில் போடும் நாளுக்காக நாங்கள் காத்திருக்கிறோம் என கூறியுள்ளனர்.
தூக்கு தண்டனை நிறைவேற்றமே தங்களது உறவினர்களின் படுகொலைக்கு கிடைக்கும் நீதி என அவர்கள் கூறுகின்றனர்.
சலீமின் தாயார் சமன் ஜகான் கூறும்பொழுது, இரவும் பகலும் இறைவனை வேண்டி கொள்கிறேன். இறைவனின் செயலை ஏற்று கொள்வோம் என கூறியுள்ளார். சலீமின் தந்தை எதுவும் கூற மறுப்பு தெரிவித்து விட்டார்.