லக்னோ
உத்தர பிரதேசத்தின் அம்ரோகா நகரை சேர்ந்தவர் ஷப்னம். இவரது காதலர் சலீம். கடந்த 2008ம் ஆண்டு ஏப்ரல் மாதம் காதலர் சலீமுடன் சேர்ந்து தனது குடும்ப உறுப்பினர்கள் 7 பேருக்கு மயக்க மருந்து கொடுத்து பின்னர் அவர்கள் அனைவரையும் கொலை செய்து விட்டார்.
இதுபற்றிய வழக்கு விசாரணையில் ஷப்னம் மற்றும் சலீம் இருவருக்கும் மாவட்ட கோர்ட்டு தூக்கு தண்டனை விதித்தது. இந்த தீர்ப்பை அலகாபாத் ஐகோர்ட்டு 2010ம் ஆண்டும், சுப்ரீம் கோர்ட்டு 2015ம் ஆண்டும் உறுதி செய்தன.
ஷப்னம் ஜனாதிபதிக்கு அனுப்பிய கருணை மனு நிராகரிக்கப்பட்டது. இதனையடுத்து அவருக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட உள்ளது. மதுராவில் உள்ள சிறையில் தூக்கு தண்டனை நிறைவேற்றப்படும் என கூறப்படுகிறது. எனினும், அவரது தூக்கு தண்டனைக்கான நாள் மற்றும் நேரம் பற்றி அம்ரோகா நீதிமன்றம் விவரங்களை இதுவரை வெளியிடவில்லை.
சப்னமின் மகன் முகமது தாஜ். தனது தாயாரின் மரண தண்டனையை குறைக்கும்படி ஜனாதிபதி ராம்நாத் கோவிந்துக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். அவர் செய்தியாளர்களிடம் கூறும்பொழுது, எனது தாயாரை நான் நேசிக்கிறேன். குடியரசு தலைவருக்கு நான் ஒரு வேண்டுகோள் வைக்கிறேன். அவரது மரண தண்டனை குறைக்கப்பட வேண்டும். தனது தாயாருக்கு மன்னிப்பு வழங்க வேண்டும் என கூறியுள்ளார்.
ஜனாதிபதி மன்னிப்பு வழங்குவது என்பது அவரது முடிவு. ஆனால் எனக்கு நம்பிக்கை உள்ளது என்று கூறியுள்ளார். உத்தர பிரதேசத்தின் புலந்த்சாகரில் சுசீலா விகார் காலனியில் உஸ்மான் சைபி என்பவரது பாதுகாப்பில் முகமது தாஜ் வசித்து வருகிறார்.