மிர்சாபூர்,
உத்தர பிரதேச மாநிலம் வாரணாசியில் இருந்து மிர்சாபூர் வந்த பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த குற்றச்சாட்டில் 8 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். இந்த சம்பவத்தை தட்டிக்கேட்ட பிரெஞ்சு நாட்டைச்சேர்ந்த ஒருவர் காயம் அடைந்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. இருப்பினும், பிரெஞ்சு நாட்டைச்சேர்ந்தவர் மீது எந்த தாக்குதலும் நடைபெறவில்லை என்று உத்தர பிரதேச போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் பற்றி விவரம் வருமாறு- பிரெஞ்சு நாட்டு சுற்றுலாப்பயணிகள் மற்றும் தங்கள் உறவினர்களுடன் வாரணாசியைச்சேர்ந்த ஒரு பெண் மிர்சாபூர் வருகை தந்துள்ளதாகவும், அப்போது, அப்பெண்ணை கேலி செய்து பாலியல் தொந்தரவு கொடுக்க உள்ளூர் சமூக விரோதிகள் சிலர் முற்பட்டதாகவும் கூறப்படுகிறது.
அப்போது, அப்பெண்ணுடன் வந்திருந்த பிரெஞ்சு நாட்டு சுற்றுலாப்பயணி இதைதட்டிகேட்டதாவும், இதனால், ஆத்திரம் அடைந்த சமூக விரோதிகள் அவரை தாக்கியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் காயம் அடைந்த பிரெஞ்சு நாட்டு பயணி உள்ளூர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் பற்றிய தகவல் அறிந்த போலீசார் பென்ணுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக 8 பேரை கைது செய்துள்ளனர். இச்சம்பவம் குறித்து விசாரணையும் மேற்கொண்டு வருகின்றனர். எனினும் பிராஞ்சு நாட்டவர் மீது எந்த தாக்குதலும் நடைபெறவில்லை என்று போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இரு குழுக்கள் இடையே நடைபெற்ற மோதலை தடுக்க முயன்ற போது பிரெஞ்சு நாட்டவர் காயம் அடைந்ததாக போலீஸ் தரப்பு தெரிவித்துள்ளது.