சுக்மா,
சத்தீஷ்காரில் நக்சலைட்டுகள் மற்றும் மாவோயிஸ்டுகள் ஆதிக்கம் நிறைந்த பல பகுதிகள் காணப்படுகின்றன. கடந்த காலங்களில் எம்.எல்.ஏ.க்கள் உள்பட அரசியல்வாதிகள் பலருக்கு அச்சுறுத்தலாக விளங்கியுள்ளனர். அவர்களுக்கு எதிராக தாக்குதல்களும் நடத்தியுள்ளனர்.
இதேபோன்று மாவட்ட கலெக்டரை கடத்தி வைத்த சம்பவங்களும் நடந்ததுண்டு. இந்த நிலையில், கொரோனா நெருக்கடி காலத்தில் நக்சலைட்டுகளில் பலர் அடிப்படை தேவைகள் கிடைக்காமல் அவதியடைந்து வருகின்றனர்.
நக்சலைட்டுகளை சரண் அடையும்படி அரசு நிர்வாகமும் தொடர்ந்து கேட்டு கொண்டுள்ளது. இந்நிலையில், சத்தீஷ்காரில் 8 நக்சலைட்டுகள் சுக்மா மாவட்ட ஆட்சியர் முன் சரண் அடைந்துள்ளனர்.
இதுபற்றி ஆட்சியர் வினீத் நந்தன்வார் கூறும்பொழுது, இது அதிக காலதாமதம் இல்லை. நக்சலைட்டுகள் அனைவரும் பொதுவாழ்வில் வரவேண்டும் என நான் அவர்களை வரவேற்கிறேன். மற்றவர்களும், இதுபோன்ற சரியான பாதையை தேர்வு செய்ய வேண்டும் என கேட்டு கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.