புதுடெல்லி,
பாரதீய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் அத்வானியை ஜனாதிபதியாக்கவே 80 சதவீத பாஜகவினர் விரும்பினர் என்று அக்கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான சத்ருகன் சின்கா தெரிவித்துள்ளார். தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில் சத்ருகன் சின்கா கூறியிருப்பதாவது:- அத்வானி எனது நண்பர், வழிகாட்டி ஈடு இணையற்ற தலைவர் ஆவார். அவரை நாட்டின் ஜனாதிபதியாக்க வேண்டும் என்றே 80 சதவீத பாஜகவினர் விரும்பினர். ஆனால், அது போல் நடக்கவில்லை.
பாஜகவில் இருந்து நான் விலகப்போவது இல்லை. பாஜகதான் எனது முதல் மற்றும் கடைசி கட்சியாகும். பாஜகவில் இருபெரும் சக்திகளாக இருப்போர்கள்தான் என்னை நிராகரித்து வருகின்றனர். பிரதமர் மோடியை 2 வாரங்களுக்கு முன்பு சந்திக்க நான் முயற்சித்தேன். ஆனால், அவர் எனக்கு நேரம் ஒதுக்கவில்லை இவ்வாறு அவர் தெரிவித்தார். 2013- ஆம் ஆண்டில் பிரதமர் மோடியை பாரதீய ஜனதா பிரதமர் வேட்பாளராக அறிவித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்த அத்வானி தலைமையிலான குழுவில் சத்ருகன் சின்காவும் இடம் பெற்று இருந்தார் என்பது கவனிக்கத்தக்கது.