புதுடெல்லி,
கொரோனா ஊரடங்கு காரணமாக மார்ச் இறுதியில் விமான சேவைகள் ரத்துசெய்யப்பட்டன. பின்னர் 2 மாதங்களுக்கு பிறகு மே 25-ந்தேதி முதல் மீண்டும் உள்நாட்டு விமான சேவை தொடங்கப்பட்டது. எனினும் கொரோனா பரவலுக்கு முன் இயக்கப்பட்ட மொத்த விமானங்களின் எண்ணிக்கையில் 33 சதவீத விமானங்கள் மட்டுமே இயக்கப்பட வேண்டும் என விமான போக்குவரத்து அமைச்சகம் உத்தரவிட்டிருந்தது.
பின்னர் இந்த எண்ணிக்கை ஜூன் 26-ந்தேதி 45 சதவீதமாகவும், செப்டம்பர் 2-ந்தேதி 60 சதவீதமாகவும், நவம்பர் 11-ந்தேதி 70 சதவீதமாகவும் அதிகரிக்கப்பட்டது.
இந்த நிலையில், தற்போது உள்நாட்டு விமானங்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கப்பட்டு உள்ளது. இதுதொடர்பாக, மத்திய சிவில் விமான போக்குவரத்துறை துறை மந்திரி ஹர்தீப் சிங் புரி வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில்,
கடந்த மே 25-ம் தேதி உள்நாட்டு விமானங்களில் பயணிக்க 30 ஆயிரம் பயணிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டது. அந்த எண்ணிக்கை, பின் 2.52 லட்சமாக உயர்த்தப்பட்டது. இந்நிலையில் இந்தியாவில் இயக்கப்படும் உள்நாட்டு விமானங்களின் எண்ணிக்கை, 70 சதவீதத்தில் இருந்து, 80 சதவீதமாக அதிகரிக்கப்படுகிறது.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.