ஸ்ரீநகர்,
நாடு முழுவதும் சுகாதார பணியாளர்கள் மற்றும் முன்கள பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. நாடு முழுவதும் இந்த பயனாளிகள் ஆர்வமாக தடுப்பூசி போட்டு வருகின்றனர்.
ஆனால் காஷ்மீரில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள சுகாதார பணியாளர்கள் தயங்கி வருகின்றனர். யூனியன் பிரதேசத்தில் 80 சதவீதத்துக்கும் மேற்பட்ட சுகாதார பணியாளர்கள் தடுப்பூசி போட மறுத்து உள்ளதாக காஷ்மீர் டாக்டர்கள் சங்கம் தெரிவித்து உள்ளது.
ஸ்ரீநகரில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரி மற்றும் அதனுடன் இணைந்த ஆஸ்பத்திரிகளில் உள்ள 7 ஆயிரம் சுகாதார பணியாளர்களில் வெறும் 1,167 பேர் (16.67 சதவீதம்) மட்டுமே தடுப்பூசி போட்டுள்ளனர். மீதமுள்ளவர்கள் மறுத்து விட்டனர்.
தடுப்பூசிகள் மீதான அவநம்பிக்கை மற்றும் தவறான தகவல்களே இதற்கு காரணம் என சங்க தலைவர் டாக்டர் நிசார் உல் ஹசன் தெரிவித்துள்ளார். சிலர் தடுப்பூசிக்காக இன்னும் காத்திருக்கலாம் எனவும், சிலரோ தாங்கள் இளைஞர்கள் என்பதால் தங்களை கொரோனா வெற்றி கொள்ளாது என்ற மெத்தனத்தில் இருப்பதாகவும் அவர் கூறினார்.
இந்த தயக்கம் பெரும் பிரச்சினையாக இருப்பதாக கூறிய அவர், கொரோனா நோயாளிகளை கையாளுவதன் மூலம் சுகாதார பணியாளர்களுக்கு அதிக ஆபத்து இருப்பதால், அவர்கள் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என கோரிக்கையும் விடுத்துள்ளார்.