புதுடெல்லி,
நாடாளுமன்ற மாநிலங்களவையில் நேற்று கேள்வி நேரத்தின்போது, ஒரு கேள்விக்கு மத்திய சுகாதாரத்துறை இணை மந்திரி அஸ்வினி சவுபே அளித்த பதில் வருமாறு:-
கடந்த 16-ந் தேதிவரை, தடுப்பூசி போட்டுக்கொண்ட 89 பேர் பலியாகி உள்ளனர். ஆனால், எந்த மரணத்துக்கும் தடுப்பூசிதான் காரணம் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை. தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களுக்கு ஏதேனும் பக்க விளைவுகள் ஏற்படுகிறதா என்பதை கண்காணிக்க உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. மரணத்துக்கு தடுப்பூசிதான் காரணமா என்பதை ஆய்வு செய்ய சிறப்பு குழு ஒன்று செயல்பட்டு வருகிறது.
மேலும் கொரோனா தடுப்பூசிக்கு பதிவு செய்யும் நேரத்தில், பயனாளிகளின் பெயர், பாலினம், பிறந்த ஆண்டு மற்றும் அரசாங்க புகைப்பட அடையாள எண் ஆகியவை சேகரிக்கப்படுகின்றன. கொரோனா தடுப்பூசிக்கான பதிவு நேரத்தில் இந்த தரவுகள் பயனாளியால் உள்ளிடப்படுகிறது, மேலும் இந்த தரவை சேகரிக்க எந்த நிறுவனத்திற்கும் அங்கீகாரம் இல்லை. கொரோனா தடுப்பூசியின் பயனாளிகளின் தனிப்பட்ட தரவுகள், பாதுகாப்பு மற்றும் ரகசியத்தன்மை ஆகிய விதிமுறைகளுக்கு இணங்குகிறதுஎன்று அவர் கூறினார்.