கொல்கத்தா,
சிபிஎஸ்சி 10 வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் கடந்த சனிக்கிழமை வெளியிடப்பட்டது. தேர்வில் மேற்கு வங்காள மாநிலத்தை சேர்ந்த 90 சதவிதம் ஊனமுற்ற மாணவர் துகின் (வயது 17) 88 சதவித மதிப்பெண்கள் பெற்று அசத்தி உள்ளார். பெண்களின் கர்ப்ப காலங்களில் பாதிப்பை ஏற்படுத்தும் Arthrogryposis multiplex congenita நோயினால் துகின் பாதிக்கப்பட்டவர். குழந்தையின் இணைப்பு பகுதிகள், கை மற்றும் கால்களில் வளர்ச்சியை குறைத்து முடக்க செய்யும். துகின் சிறு வயதில் இருந்தே படிப்பில் ஆர்வம் கொண்டவர். கை மற்றும் கால்கள் பாதிக்கப்பட்டு இருந்தாலும் படிப்பில் கவனமாக செயல்படுபவர். வாயில் பேனாவை பிடித்து தேர்வெழுதி வருகிறார்.
தனக்காக தேர்வு எழுத யாரையும் அவர் தேடுவது கிடையாது, தேர்வுகளில் இதுபோன்று பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்படும் கூடுதல் கால அவகாசத்தையும் அவர் ஏற்பது கிடையாது. குறிப்பிட்ட நேரத்திற்குள் தேர்வை எழுதி முடிப்பவர்.
துகின் ஆசை எல்லாம் உலகப் புகழ்பெற்ற இயற்பியல் ஆராய்ச்சியாளர் ஸ்டீபன் ஹாக்கிங் போலாக வேண்டும் என்பதுதான். அதற்கான நகர்வுகளிலும் சிறப்பாக கவனம் செலுத்தி வருகிறார். ஐ.ஐ.டி. காரக்பூரில் நடைபெற்ற தேர்வில் கலந்துக் கொண்டார். ஐ.ஐ.டி. நுழைவுத் தேர்வுக்காக ராஜஸ்தான் மாநிலம் கோடாவிற்கு சென்று சிறப்பு பயிற்சியும் பெற்று உள்ளார். அவருடைய தாயார் சுஜாதா பேசுகையில், பள்ளி நிர்வாகிகள் தரப்பில் தேர்ச்சி விகிதம் தெரிவிக்கப்பட்டது, ஆனால் பாடவாரியான மதிப்பெண்கள் தெரியவரவில்லை.
துகின் படிப்பில் தீவிர ஆர்வம் கொண்டவன். 9-ம் வகுப்பு வரையில் 90%க்கும் அதிகமான மதிப்பெண்கள் எடுப்பான். இப்போது 95%-க்கு அதிகமான மதிப்பெண்கள் எதிர்பார்த்தோம். அவனது உடல் நிலை இயலாமை காரணமாக சிறப்பு துறைகளில் கவனம் செலுத்த முடியவில்லை, எனவே பள்ளியில் இருந்து செயல்திறன் மதிப்பீடு குறைத்து அனுப்பியிருக்கலாம், என கூறிஉள்ளார்.
துகின் பள்ளி செல்வதும் எளிதான காரியம் கிடையாது. சுமார் 14 கிலோ மீட்டர் தொலைவு உள்ள பள்ளிக்கு தினவும் அவருடைய பெற்றோர் அழைத்து செல்கின்றனர். 10-ம் வகுப்பு பொதுத் தேர்வையும் துகின் யாருடைய உதவியும் இன்றி தானாகவே எழுதிஉள்ளார்.
ராஜஸ்தான் மாநிலம் கோடாவில் ஐ.ஐ.டி. நுழைவுத் தேர்வுக்கு பயிற்சி வழங்கும் நிறுவனம் துகினுடைய சிறப்பு திறமையை இருமுறை கவுரவித்து உள்ளது. 2012-ம் ஆண்டு துகின் சிறந்த கிரியேட்டிவ் குழந்தைகளுக்கான விருதை ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியிடம் பெற்றார். 1999ம் ஆண்டு துகின் பிறந்ததில் இருந்து அவருக்கு 20க்கும் அதிகமான அறுவை சிகிச்சை செய்யப்பட்டு உள்ளது. ஆனால் அவருடைய படிப்பை பாதிக்கவில்லை என்று கூறிஉள்ளார் சுஜாதா. சுஜாதா துகினை கவனித்துக் கொள்ள மத்திய அரசு பணியில் இருந்து விலகி உள்ளார். அவருடைய தந்தை ரியல் எஸ்டேட் தொழில் ஈடுபட்டு உள்ளார். இருவரும் மகனின் படிப்புக்காக கோடாவில் தங்க உள்ளனர்.
கேட்டாவில் உள்ள ஆலன் கேரியர் நிறுவனம் துகினுக்கு பயிற்சி கட்டணமான ரூ. 1.18 லட்சத்தை தள்ளுபடி செய்துள்ளது.