புதுடெல்லி,
தேசத்துரோக வழக்கில் எடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்த உறுப்பினர்களின் கேள்விகளுக்கு மாநிலங்களவையில் நேற்று மத்திய உள்துறை இணை மந்திரி கிஷண் ரெட்டி எழுத்து மூலம் பதிலளித்தார். அதில் 2019-ம் ஆண்டில் இந்த சட்டத்தின் கீழ் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும் அவர் கூறினார். அந்தவகையில், 2019-ம் ஆண்டில் நாடு முழுவதும் தேசத்துரோக சட்டப்பிரிவின் கீழ் 93 வழக்குகள் பதிவு செய்யப்பட்டதாவும், இதில் 96 பேர் கைது செய்யப்பட்டதாகவும் அவர் கூறினார். கைது செய்யப்பட்டவர்களில் 76 பேருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட நிலையில், அதில் 29 பேர் விடுதலை செய்யப்பட்டனர் எனவும் அவர் குறிப்பிட்டார்.
2019-ம் ஆண்டில் அதிக தேசத்துரோக வழக்குகளை சந்திரத்த மாநிலமாக கர்நாடகா அறியப்படுகிறது. அங்கு 22 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 18 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். அடுத்ததாக அசாமில் 17 வழக்குகளில் 23 பேர் கைது செய்யப்பட்டனர். இதைப்போல காஷ்மீரில் 11 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 16 பேரும், உத்தரபிரதேசத்தில் 10 வழக்குகளில் 9 பேரும் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
தேசத்துரோக சட்டத்தை வலுவாக்குவதற்காக ஏதும் நடவடிக்கை எடுக்கப்படுமா? என்ற கேள்விக்கு பதிலளித்த கிஷண் ரெட்டி, சட்ட திருத்தங்கள், வழக்கமான நடைமுறைதான் என தெரிவித்தார்.