சித்தூர்,
பலமநேரில் சாலையோர பள்ளத்தில் கார் கவிழ்ந்து தீப்பிடித்து எரிந்ததில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் தீயில் கருகி பலியாகினர். இதில் திருப்பதி தேவஸ்தான ஊழியர் படுகாயம் அடைந்தார்.
திருப்பதியை சேர்ந்தவர் விஷ்ணு (வயது 35). இவர் திருமலை-திருப்பதி தேவஸ்தானத்தில் இளநிலை உதவியாளராக பணிபுரிந்து வருகிறார். இவர் தனது மனைவி ஜானவி (32), மகன் பவன்ராம் (9), மகள் அஷ்ரிதா (5) மற்றும் தனது தங்கை கலா (28) அவருடைய மகள் பானுதேவி (5) ஆகியோருடன் திருப்பதியில் இருந்து பெங்களூருவுக்கு காரில் சென்றார்.
காரை விஷ்ணு ஓட்டி வந்தார். சித்தூர் மாவட்டம் பலமநேர் என்ற இடத்தில் வந்தபோது திடீரென கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர பள்ளத்தில் தலைகுப்புற கவிழ்ந்தது. அப்போது திடீரென கார் தீப்பிடித்து எரியத்தொடங்கியது. கார் எரிவதை பார்த்து அதிர்ச்சியடைந்த அப்பகுதியை சேர்ந்தவர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பலமநேர் போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் காரில் பற்றி எரிந்த தீயை அணைத்தனர். ஆனால் அதற்குள் காரில் இருந்த ஜானவி, பவன்ராம், அஷ்ரிதா, கலா, பானுதேவி ஆகிய 5 பேர் தீயில் கருகி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் விஷ்ணு படுகாயம் அடைந்தார்.