புதுடெல்லி,
டெல்லியில் டாக்டராக பணிபுரிந்து வருபவர் ஸ்ரீதர். இவரது மனைவி டாக்டர் ஹிமா பிந்து. கிறிஸ்துமஸ் தினமான கடந்த 25-ந் தேதி டாக்டர் ஸ்ரீதர், ஹவுஸ்காஸ் போலீஸ் நிலையத்தில் தனது மனைவியையும், நண்பரையும் காணவில்லை என்று புகார் கூறினார். இதுபற்றிய விவரம் வருமாறு:-
டாக்டர் ஸ்ரீதர், அவரது மனைவி டாக்டர் ஹிமா பிந்து, சென்னையை சேர்ந்த டாக்டர் கே.திலீப் சத்யா ஆகிய 3 பேரும் 2007-ம் ஆண்டு எம்.பி.பி.எஸ். முதலாம் ஆண்டில் இருந்து ஒன்றாக படித்தனர். இதனால் அப்போது முதல் இவர்கள் 3 பேரும் நண்பர்களாக இருந்து வந்தனர்.
டாக்டர் ஸ்ரீதர், ஹிமா பிந்துவை திருமணம் செய்துகொண்டு டெல்லியில் பணியாற்றி வருகிறார். சென்னையில் இருந்து டெல்லி சென்ற டாக்டர் திலீப் சத்யா கடந்த 25-ந் தேதி காலை 9 மணிக்கு நண்பரான டாக்டர் ஸ்ரீதரை அவரது வீட்டில் சந்தித்தார். பின்னர் டாக்டர் ஸ்ரீதர் வேலைக்கு சென்றுவிட்டார்.
காலை 11.30 மணி அளவில் ஹிமா பிந்து கிறிஸ்தவ ஆலயத்துக்கு செல்வதாக தனது கணவரிடம் போனில் தெரிவித்துவிட்டு சென்றார். அதன்பின்னர் டாக்டர் ஸ்ரீதரால் தனது மனைவியையோ, தனது நண்பர் திலீப் சத்யாவையோ தொடர்புகொள்ள முடியவில்லை. இருவரும் மாயமாகிவிட்டதால் போலீசில் புகார் செய்துள்ளார்.
இதுபற்றி போலீசார் கூறும்போது, 25-ந் தேதியே நாங்கள் கடத்தல் (சட்டப்பிரிவு 365) வழக்கு பதிவு செய்துள்ளோம். சில தனிப்படைகள் அமைத்து இருவரையும் தேடி வருகிறோம். சென்னை, சண்டிகார், ஆந்திரா உள்பட சில மாநிலங்களுக்கும் தனிப்படையினர் சென்றுள்ளனர். இதுவரை அவர்களை கண்டுபிடிக்க முடியவில்லை என்றனர்.