சண்டிகர்,
பஞ்சாப் மாநிலத்தில் உள்ள 117 சட்டமன்ற தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை தற்போது நடைபெற்று வருகிறது. பஞ்சாபில் தற்போதைய நிலவரப்படி ஆளும் காங்கிரஸ் கட்சி இரண்டாவது இடத்திலும் ஆம் ஆத்மி முதல் இடத்திலும் உள்ளன.
இந்நிலையில் துரி தொகுதியில் போட்டியிடும் ஆம் ஆத்மியின் முதல் மந்திரி வேட்பாளர் பகவந்த் மான் முன்னிலை வகிக்கிறார். காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர்கள் பின்னடைவை சந்தித்துள்ளனர்.
தற்போது வரை எண்ணப்பட்ட வாக்கு எண்ணிக்கை நிலவரப்படி, ஆம் ஆத்மி 90 இடங்களிலும், காங்கிரஸ் 14 இடங்களிலும், சிரோன்மனி அகாலிதளம் கூட்டணி 9 இடங்களிலும், பாஜக கூட்டணி 3 இடங்களிலும் மற்றவை 1 இடத்திலும் முன்னிலை பெற்றுள்ளன. ஆளும் காங்கிரஸ் கட்சிக்கு இது பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் ஆம் ஆத்மி கட்சி தொண்டர்கள் தங்கள் கட்சியின் பெரும்பான்மை வெற்றியை ஆரவாரமாக கொண்டாடி வருகின்றனர்.
அந்த வகையில், அங்கு ஆம் ஆத்மியின் முதல் மந்திரி வேட்பாளர் பகவந்த் மான் மற்றும் ஆம் ஆத்மி கட்சி தலைவர் அர்விந்த் கெஜ்ரிவால் போல வேடமணிந்த அக்கட்சி தொண்டரின் சிறிய குழந்தை ஒன்று அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.