புதுச்சேரி,
மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களை திரும்ப பெற வேண்டும் என்று வலியுறுத்தி டெல்லியில் விவசாயிகள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இவர்களுக்கு ஆதரவாக புதுவையில் காங்கிரஸ், தி.மு.க., இந்திய கம்யூனிஸ்டு கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி, விடுதலை சிறுத்தைகள், ம.தி.மு.க. உள்ளிட்ட கூட்டணி கட்சிகள் மற்றும் பல்வேறு தொழிற்சங்கங்கள் சார்பில் இன்று(திங்கட்கிழமை) முழு அடைப்பு போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது.
இதற்காக காங்கிரஸ், தி.மு.க. கூட்டணி கட்சிகள் சார்பில் நேற்று நகரின் முக்கிய வீதிகளில் வியாபாரிகளை சந்தித்து முழு அடைப்பு போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்க வேண்டும் என்று வலியுறுத்தினர். மேலும் தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம், ஆட்டோ, டெம்போ ஓட்டுனர்கள் சங்கம், தொழிற்சாலை நிர்வாகிகளை சந்தித்து ஆதரவு திரட்டினர்.
புதுவையில் முழு அடைப்பு போராட்டத்தை தொடர்ந்து இன்று (திங்கட்கிழமை) தனியார் பஸ்கள், ஆட்டோ, டெம்போக்கள் ஓடாது. வர்த்தக நிறுவனங்கள் மூடப்படும். புதுச்சேரியில் தனியார் பஸ்களே அதிக அளவில் உள்ளன. அரசு பஸ்கள் குறைந்த எண்ணிக்கையில் தான் இயக்கப்படுகிறது. இதனால் பயணிகள் பெரிதும் பாதிக்கப்படுவார்கள்.
இதுகுறித்து போக்குவரத்துதுறை அதிகாரி ஒருவரிடம் கேட்ட போது, புதுவையில் இன்று அரசு பஸ்கள் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் இயக்கப்படும்என்றார்.
தனியார் பஸ் உரிமையாளர் சங்க தலைவர் பாரதி கண்ணனிடம் கேட்ட போது, புதுவையில் முழு அடைப்பு போராட்டம் நடத்த அரசியல் கட்சியினர் எங்களிடம் ஆதரவு கேட்டுள்ளனர். எனவே இன்று (திங்கட்கிழமை) புதுவையில் தனியார் பஸ்கள் ஓடாது என்றார்.