தேசிய செய்திகள்

இந்தியாவில் மேலும் 12,689 பேருக்கு கொரோனா தொற்று - புதிய பாதிப்புகள் தொடர்ந்து சரிகிறது

இந்தியாவில் மேலும் 12,689 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தாலும், புதிய பாதிப்புகள் தொடர்ந்து சரிந்து வருவதாக மத்திய அரசு கூறியிருக்கிறது.

புதுடெல்லி,

இந்தியாவில் கடந்த ஓராண்டாக மக்களை துன்புறுத்தி வரும் கொரோனா தொற்று இன்னும் முற்றிலும் கட்டுக்குள் வரவில்லை. தற்போதும் 10 ஆயிரத்துக்கு மேற்பட்டவர்களை தினமும் தனது மாயவலைக்குள் வீழ்த்தி வருகிறது.

இதைப்போல நூற்றுக்கும் மேற்பட்டோர் தினமும் கொரோனாவால் மடிந்து வருகின்றனர். எனினும் பல்வேறு உலக நாடுகளை ஒப்பிடுகையில் இந்தியாவில் புதிய பாதிப்புகளும், மரண விகிதமும் தொடர்ந்து கட்டுக்குள் வந்து கொண்டிருக்கிறது.

நாடு முழுவதும் நேற்று காலை 8 மணி வரையிலான 24 மணி நேரத்தில் 12 ஆயிரத்து 689 பேர் புதிதாக தொற்றுக்கு ஆளாகி இருக்கின்றனர். இந்தியாவில் ஒருநாள் பாதிப்பு 97 ஆயிரத்துக்கு மேல் சென்ற நிலையில், தற்போது 13 ஆயிரத்துக்கு கீழ் இந்த எண்ணிக்கை குறைந்து வருவது மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

புதிதாக பாதிப்புக்குள்ளான 12,689 பேரையும் சேர்த்து இந்தியாவில் இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1 கோடியே 6 லட்சத்து 89 ஆயிரத்து 527 ஆகியிருக்கிறது.

மேற்படி 24 மணி நேரத்தில் இந்தியாவில் புதிதாக மரணத்தை தழுவியவர்களின் எண்ணிக்கை வெறும் 137 ஆகும். இதன் மூலம் இந்தியாவில் நிகழ்ந்துள்ள கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 1 லட்சத்து 53 ஆயிரத்து 724 ஆக உயர்ந்திருக்கிறது.

அதேநேரம் நாட்டில் மொத்த பாதிப்பில் உயிரிழப்பு விகிதமோ 1.44 ஆகவே நீடித்து வருகிறது. இது உலக அளவில் மிகவும் குறைவான விகிதங்களில் ஒன்றாகும்.

இந்தியாவில் கொரோனாவால் அதிகமானோர் உயிரிழந்த மாநிலங்களின் பட்டியலில் மராட்டியம் தொடர்ந்து முதலிடத்தில் இருக்கிறது. அங்கு நேற்று காலை வரை 50 ஆயிரத்து 862 பேர் பலியாகி இருக்கின்றனர்.

அடுத்த இடங்களில் தமிழ்நாடு (12,325), கர்நாடகா (12,204) ஆகிய மாநிலங்கள் உள்ளன. இதைப்போல டெல்லி (10,820) மேற்கு வங்காளம் (10,131), உத்தரபிரதேசம் (8,632), ஆந்திரா (7,150) பஞ்சாப் (5,571), குஜராத் (4,381) ஆகிய மாநிலங்களும் கணிசமான உயிரிழப்புகளை சந்தித்துள்ளன.

இந்தியாவில் இதுவரை பாதிக்கப்பட்டவர்களில் 96.91 சதவீதம் பேர் மீண்டுவிட்டனர். அதாவது 1 கோடியே 3 லட்சத்து 59 ஆயிரத்து 305 பேர் குணமடைந்து உள்ளனர். இதன் மூலம் சிகிச்சையில் இருக்கும் நோயாளிகளின் எண்ணிக்கை 1 லட்சத்து 76 ஆயிரத்து 498 ஆக சரிந்திருக்கிறது. அதாவது மொத்த பாதிப்பில் வெறும் 1.65 சதவீதத்தினர் மட்டுமே பல்வேறு ஆஸ்பத்திரிகள் மற்றும் மருத்துவமனைகளில் சிகிச்சையில் உள்ளனர்.

புதிய பாதிப்புகள் குறைவு மற்றும் அதிகமானோர் குணமடைந்து வருதல் போன்ற காரணங்களால், மருத்துவமனைகளில் சிகிச்சையில் இருக்கும் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை தொடர்ந்து சரிந்து வருகிறது.

இது உலக அளவில் கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் மிகப்பெரிய வெற்றியாக கருதப்படுகிறது. இது இந்தியாவின் தரமான சிகிச்சை மற்றும் வலிமையான மருத்துவ கட்டமைப்புக்கான சான்றாகவும் திகழ்கிறது.

இந்தியாவில் விடுமுறை தினமான நேற்று முன்தினம் மட்டும் 5 லட்சத்து 50 ஆயிரத்து 426 சளி மாதிரிகள் கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு இருக்கின்றன. இதன் மூலம் நாடு முழுவதும் இதுவரை மேற்கொள்ளப்பட்ட கொரோனா பரிசோதனைகளின் எண்ணிக்கை 19 கோடியே 36 லட்சத்து 13 ஆயிரத்து 120 ஆக அதிகரித்து விட்டது.

இந்த தகவல்களை மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டு இருக்கிறது.