மும்பை,
மும்பை சர்வதேச விமான நிலையத்தில் இருந்து துபாய்க்கு செல்லும் விமானத்தில் வைரம் கடத்தப்படுவதாக கிடைத்த தகவலை தொடர்ந்து சுங்கத்துறை அதிகாரிகள் சம்பவத்தன்று துபாய் செல்ல இருந்த பயணிகள் மற்றும் அவர்களது உடமைகளை தீவிரமாக சோதனை செய்தனர்.
அப்போது தமிழகத்தை சேர்ந்த சலீம் பாஷா என்ற பயணியின் உடைமைகளை சோதனை செய்தபோது அதில் இருந்த வைரக்கற்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மொத்தம் 670 வைரக்கற்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இவற்றின் மதிப்பு ரூ.10 கோடி என அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இதைத்தொடர்ந்து சலீம்பாஷாவை அதிகாரிகள் கைது செய்து விசாரணை நடத்தினார்கள். அப்போது அவர் துபாயில் உள்ள சாகித் அலி என்பவரிடம் ஒப்படைக்குமாறு ஒருவர் தன்னிடம் அந்த வைர பார்சலை கொடுத்ததாகவும், அதற்கு ரூ.45 ஆயிரம் கமிஷன் தருவதாகவும் கூறினார், இதனால் வைரத்தை கடத்த முயன்றேன் என்றார்.