புதுடெல்லி
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. இந்த தொடரையொட்டி பிரதமர் மோடி தலைமையில் இன்று அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெற்றது.
பொதுவாக நாடாளுமன்ற கூட்டத்தொடர் தொடங்குவதற்கு முன்னரே அனைத்துக்கட்சி கூட்டம் நடத்தப்படும். ஆனால் இந்த முறை தொடர் தொடங்கிய பின்னரே கூட்டம் நடத்தப்படுவது குறிப்பிடத்தக்கது.
அனைத்துக்கட்சி கூட்டத்தில் வேளாண் சட்டங்கள் குறித்த பிரச்சினையை அரசு திறந்த மனதுடன் அணுகுவதாக பிரதமர் உறுதியளித்தார். கடந்த ஜனவரி 22-ஆம் தேதி அரசு கொண்டிருந்த நிலைப்பாடு தான் தற்போதும் நீடிக்கிறது. வேளாண் அமைச்சர் வழங்கிய திட்ட முன்மொழிவு தற்போதும் நீடிக்கிறது. பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்துச் செல்வதற்கு வேளாண் அமைச்சருக்கு ஒரே ஒரு தொலைபேசி அழைப்பு விடுத்தால் போதும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
அமெரிக்காவில் உள்ள மகாத்மா காந்தியின் சிலை இன்று காலை அவமதிக்கப்பட்ட நிகழ்விற்குக் கண்டனம் தெரிவித்த அவர், இதுபோன்ற வெறுப்பு மிகுந்த சூழல் நமது கிரகத்தில் வரவேற்கதக்கது அல்ல என்று தெரிவித்தார்.
இடையூறுகள் இல்லாமல், நாடாளுமன்றம் சுமூகமாக நடைபெறுவதை பெரிய கட்சிகள் உறுதி செய்யவேண்டும் என கூறினார்.
நாடாளுமன்ற கூட்டத்தில் தலைவர்கள் எழுப்பும் பிரச்சினைகள் குறித்து, விரிவான விவாதத்திற்கு அரசு தயாராக இருப்பதாக பிரதமர் தெரிவித்தார்.
அனைத்துக் கட்சி கூட்டம் முடிந்ததும் பாராளுமன்ற விவகாரத்துறை மந்திரி பிரல்ஹாத் ஜோஷி கூறியதாவது:-
மத்திய அரசுக்கும் விவசாய சங்கங்களுக்கும் இடையிலான 11வது சுற்று பேச்சுவார்த்தையின்போது, அரசாங்கம் பேச்சுவார்த்தைக்கு எப்போதும் தயாராக இருப்பதாக நாங்கள் கூறினோம். பேச்சுவார்த்தை குறித்து தொலைபேசியில் தொடர்புகொண்டு தெரிவிக்கலாம் என்று வேளாண் மந்திரி கூறினார். நீங்கள் அழைக்கும் போதெல்லாம் அவர் பேச்சுவார்த்தைக்கு தயாராக இருக்கிறார். இப்போதும் அந்த நிலை உள்ளது என அனைத்துக் கட்சி கூட்டத்தில் பிரதமர் கூறினார்.
கலிபோர்னியாவில் மகாத்மா காந்தி சிலை சேதப்படுத்தப்பட்டது. இது மிகப்பெரிய அவமானம். பிரதமர் அதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றத்தில் பேசுவதற்கு சிறிய கட்சிகளுக்கு குறைந்த நேரம் கிடைப்பதாகவும், கூடுதல் நேரம் வழங்கப்பட வேண்டும் என்றும் கேட்கப்பட்டது. அதற்கு அரசு தயாராக இருப்பதாக பிரதமர் கூறினார். ஆனால் பாஜக உள்ளிட்ட பெரிய கட்சிகள் இடையூறு ஏற்படுத்தக்கூடாது என்றும் பிரதமர் குறிப்பிட்டார் இவ்வாறு அவர் கூறினார்.
காங்கிரஸ் எம்பி ஆதிர் ரஞ்சன் சவுத்ரி கூறியதாவது:-
அரசுக்கும் விவசாயிகளுக்கும் நடந்த பேச்சுவார்த்தை குறித்து மட்டுமே பிரதமர் பேசினார். குறிப்பாக, அரசாங்கத்தின் முன்மொழிவை விவசாயிகள் ஏற்றுக்கொண்டால், அவர்கள் தொலைபேசி மூலம் தகவல் தெரிவித்தால் போதும் என வேளாண் துறை மந்திரி உறுதி அளித்ததையே பிரதமர் அனைத்துக் கட்சி கூட்டத்தில் கூறினார். அரசாங்கம் அதன் பிடிவாதமான மனநிலையிலிருந்து பிரச்சனையை கட்டுப்படுத்த பார்க்கிறது என கூறினார்.