புதுடெல்லி,
2ஜி ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீட்டில் கோடிக்கணக்கில் முறைகேடு நடந்ததாக சி.பி.ஐ.யும், அமலாக்கத்துறையும் தனித்தனியாக பதிவு செய்த வழக்குகள் டெல்லியில் உள்ள சி.பி.ஐ. சிறப்பு கோர்ட்டில் நடைபெற்று வந்தன. இந்த வழக்குகளில் முன்னாள் மத்திய தொலைத்தொடர்பு மந்திரி ஆ.ராசா, தி.மு.க. எம்.பி. கனிமொழி, ஸ்வான் டெலிகாம் நிறுவன தலைவர் ஷாகித் உஸ்மான் பல்வா உள்ளிட்ட 19 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டு இருந்தன.
இந்த வழக்குகளை விசாரித்த சிறப்பு கோர்ட்டு நீதிபதி ஓ.பி.சைனி, குற்றச்சாட்டுகளை நிரூபிக்க அரசு தரப்பு தவறிவிட்டதாக கூறி ஆ.ராசா, கனிமொழி எம்.பி. உள்ளிட்ட அனைவரையும் விடுதலை செய்து கடந்த 2017 டிசம்பர் 21-ந்தேதி தீர்ப்பு கூறினார்.
சி.பி.ஐ. சிறப்பு கோர்ட்டின் இந்த தீர்ப்புக்கு எதிராக அமலாக்கப்பிரிவு மற்றும் சி.பி.ஐ. சார்பில் டெல்லி ஐகோர்ட்டில் தனித்தனியாக கடந்த மார்ச் 2018-ல் மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்கள் மீது பதில் மனு தாக்கல் செய்யுமாறு ஆ.ராசா, கனிமொழி உள்ளிட்ட அனைவருக்கும் நோட்டீஸ் அனுப்ப கடந்த 2018 மார்ச் 21-ந்தேதி ஐகோர்ட்டு உத்தரவிட்டது. அதன் பிறகு இந்த மேல்முறையீட்டு மனுக்கள் மீதான விசாரணை பல்வேறு காரணங்களால் ஒத்திவைக்கப்பட்டு வந்தன.
இந்த மேல்முறையீட்டு மனுக்களை விரைந்து விசாரிக்க வேண்டும் என்று சி.பி.ஐ. மற்றும் அமலாக்கப்பிரிவு தரப்பில் டெல்லி ஐகோர்ட்டில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்களை நீதிபதி பிரிஜேஷ் சேத்தி, காணொலி மூலம் விசாரணை நடத்தினார். இந்த மனுக்கள் மீது அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்த நிலையில் கடந்த 22-ந்தேதி தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தார்.
இந்த நிலையில் நேற்று இந்த மனுக்கள் நீதிபதி பிரிஜேஷ் சேத்தி காணொலி வழியாக தீர்ப்பு வழங்கினார். அத்தீர்ப்பில் சி.பி.ஐ மற்றும் அமலாக்கப்பிரிவு ஆகியோரின் மேல்முறையீட்டு மனுக்களை விரைந்து விசாரிக்குமாறு தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்களில் உள்ள கோரிக்கை ஏற்கப்படுவதாகவும், 2ஜி விவகாரத்தில் மேல்முறையீட்டு வழக்கை அடுத்த மாதம் 5-ந்தேதியில் இருந்து தினசரி அடிப்படையில் விசாரிக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.
இந்த வழக்கை விசாரிக்கும் நீதிபதி பிரிஜேஷ் சேத்தி வருகிற நவம்பர் மாத இறுதியில் பணி ஓய்வு பெறுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.