புதுடெல்லி,
நாடாளுமன்ற மாநிலங்களவையில் கடந்த 2 நாட்களாக மாற்றுத்தாய் கட்டுப்பாடு மசோதா குறித்த விவாதம் நடைபெற்றது. விவாதத்தின் போது, தி.மு.க. எம்.பி. மூத்த வக்கீல் பி.வில்சன் மற்றும் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் பேசும்போது, இந்த மசோதாவை தேர்வுக்குழுவுக்கு அனுப்பி அதன் பிறகு சட்டமாக்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.
நேற்று முன்தினம் நாடாளுமன்ற மாநிலங்களவையில் இப்பிரச்சினை குறித்து மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை மந்திரி ஹர்ஷ வர்தன் பேசும்போது, தி.மு.க. உள்ளிட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வைத்த கோரிக்கையை ஏற்று மாற்றுத்தாய் கட்டுப்பாடு மசோதாவை நிறைவேற்றிட தி.மு.க. எம்.பி. ஆர்.எஸ்.பாரதி உள்பட 23 எம்.பி.க்கள் அடங்கிய தேர்வுக்குழு அமைக்கப்படுகிறது. இந்த குழு அடுத்த கூட்டத் தொடரின்போது முதல் வாரத்தில் அறிக்கை தாக்கல் செய்திட வேண்டும் என்று கூறி தீர்மானத்தை கொண்டு வந்தார். இந்த தீர்மானம் மாநிலங்களவையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.