ஆமதாபாத்,
ஆமதாபாத்தில் மோட்டேரா பகுதியில் அமைந்துள்ள சர்தார் வல்லபாய் படேல் கிரிக்கெட் மைதானத்தில் இன்று பிற்பகல் நமஸ்தே டிரம்ப் என்னும் பிரமாண்ட நிகழ்ச்சி நடைபெறுகிறது.
அமெரிக்க ஜனாதிபதி டிரம்பும், இந்திய பிரதமர் மோடியும் பேசுகிற இந்த நிகழ்ச்சியில், 1 லட்சத்துக்கும் அதிகமானோர் பங்கேற்பார்கள் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. இந்த நிலையில், மிகவும் முக்கியமான பிரபலங்களுக்காக (வி.வி.ஐ.பி.) கிரிக்கெட் மைதானத்துக்கு வெளியே தற்காலிகமாக ஒரு கேட் அமைக்கப்பட்டிருந்தது.
உருக்கு கம்பிகளையும், பிளெக்ஸ் பேனர்களையும் கொண்டு வடிவமைக்கப்பட்டிருந்த இந்த தற்காலிக கேட், நேற்று காலையில் வீசிய பலத்த காற்று காரணமாக விழுந்து சேதம் அடைந்தது. சிறிது நேரத்தில் பிரதான நுழைவாயிலில் இன்னொரு தற்காலிக கேட்டும் விழுந்து சேதம் அடைந்தது. இந்த சம்பவங்களில் யாருக்கும் எந்த பாதிப்பும் இல்லை. விழுந்த கேட்டுகள் சிறிது நேரத்தில் சரி செய்யப்பட்டு விட்டதாக தகவல்கள் கூறுகின்றன.