புதுடெல்லி,
இந்தியாவில் கடந்த மாதம் 16-ந்தேதி முதல் கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. கொரோனாவுக்கு எதிராக உலக அளவில் மிகப்பெரிய தடுப்பூசி திட்டத்தை அமல்படுத்தி உள்ள இந்தியா, இந்த திட்டத்தின்கீழ் வேகமாக செயலாற்றி வருகிறது. இதனால் நாள்தோறும் லட்சக்கணக்கான பயனாளிகள் தடுப்பூசி போட்டு வருகின்றனர்.
இந்நிலையில் இந்தியாவில் 77 லட்சத்து 66 ஆயிரத்து 319 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகத்தின் இணை செயலாளர் மந்தீப் பண்டாரி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் அளித்த பேட்டியில் கூறுகையில்,
நாடு முழுவதும் இன்று (பிப்ரவரி 12) மாலை 6 மணி நிலவரப்படி 77 லட்சத்து 66 ஆயிரத்து 319 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டு உள்ளது. இதில் 58 லட்சத்து 65 ஆயிரத்து 813 பேர் சுகாதார பணியாளர்கள் ஆவர். இது மொத்த சுகாதாரப் பணியாளர்களில் 58.9% ஆகும். அதேநேரம் தடுப்பூசி போட்டுக்கொண்ட முன்கள பணியாளர்களின் எண்ணிக்கை 19 லட்சத்து 00 ஆயிரத்து 506 ஆகும்.
கொரோனா தடுப்பூசிக்கு எதிராக மருத்துவமனையில்அனுமதிக்கப்பட்ட 33 பேரில் 2 பேர் சிகிச்சையில் உள்ளனர். 21 பேர் மருத்துவமனையில் இருந்து வெளியேற்றப்பட்டனர் மற்றும் 10 பேர் இறப்புகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. தடுப்பூசிக்கு எதிராக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களின் சதவீதம் 0.0004% ஆகும். சுகாதாரப் பணியாளர்களுக்கான தடுப்பூசி செலுத்தும் பணி பிப்ரவரி 25 ஆம் தேதிக்குள் முடிவடையும்.
முன்கள பணியாளர்களுக்கு, தடுப்பூசிக்கான திட்டமிடல் மார்ச் 1 ஆம் தேதிக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எந்தவொரு காரணத்திற்காகவும் தடுப்பூசி போட முடியாதவர்களுக்கு மாப் அப் சுற்று மூலம் மார்ச் 6 க்குள் வழங்கப்பட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.