மைசூரு:
உலக யோகா தினம்
உலக யோகா தினத்த முன்னிட்டு வருகிற 21-ந்தேதி மைசூரு அரண்மனையில் யோகா தினவிழா நிகழ்ச்சி நடக்கிறது. இதில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொள்ள உள்ளார். இதற்கான முன்னேற்பாடுகள் மைசூரு மாவட்ட நிர்வாகம் சார்பில் தீவிரமாக நடந்து வருகிறது.
மேலும் யோகா தினவிழா நிகழ்ச்சியான ஒத்திகையும் நடக்கிறது. இந்த யோகா தினவிழாவில் 15 ஆயிரம் பேர் வரை பங்கேற்க உள்ளனர். யோகா தினவிழாவில் கலந்து கொள்ள முன்பதிவு செய்யப்பட்டு வருகிறது.
ஒத்திகை நடந்தது
இந்த நிலையில் மைசூரு அரண்மனை வளாகத்தில் 2 கட்ட யோகா பயிற்சி ஒத்திகை நேற்று காலை தொடங்கப்பட்டது. இதனை கூட்டுறவுதுறை மந்திரியும், மைசூரு மாவட்ட பொறுப்பு மந்திரியுமான எஸ்.டி.சோமசேகர், கணபதி சச்சிதானந்த ஆசிரமத்தின் மடாதிபதி சச்சிதானந்த சாமி ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
இதையடுத்து யோகா பயிற்சியாளர்கள் வழிகாட்டுதல் பேரில் தரை விரிப்பான்களை பயன்படுத்தி ஆயிரக்கணக்கான மக்கள் யோகா பயிற்சி ஒத்திகையில் ஈடுபட்டனர். இந்த யோகா பயிற்சி ஒத்திகை காலை 8 மணி முதல் 9 மணி வரை நடந்தது. இதேபோல் வருகிற 12-ந்தேதி 2-வது கட்ட யோகா பயிற்சி ஒத்திகை நடக்க உள்ளது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையே மந்திரி எஸ்.டி.சோமசேகர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
3 நுழைவு வாயில்கள்...
பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொள்ளும் யோகா தினவிழா நிகழ்ச்சியில் 15 ஆயிரம் பேர் வரை பங்கேற்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. கர்நாடகத்தில் 12 ஆயிரம் பேர் வரை யோகா தினவிழாவில் பங்கேற்க முன்பதிவு செய்துள்ளனர். தேசிய அளவில் 3 ஆயிரம் பேர் வரை பதிவு செய்து வருகின்றனர்.
யோகா தினவிழா நிகழ்ச்சியையொட்டி மைசூரு அரண்மனையில் 3 நுழைவு வாயில்கள் பயன்படுத்தப்படுகிறது. முதல் நுழைவு வாயிலில் பிரதமர் உள்பட முக்கிய நபர்கள் அனுமதிக்கப்பட உள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.