புதுடெல்லி,
நக்சலைட்டுகள் வன்முறையில் பாதிக்கப்படும் மக்கள் மத்திய அரசின் நிதி உதவி பெறுவதற்கு ஆதார் கட்டாயம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:-
இந்திய எல்லைக்குள் பயங்கரவாதிகள், மதரீதியான மற்றும் இடதுசாரி பயங்கரவாத வன்முறைகள், எல்லைதாண்டிய துப்பாக்கி சூடு, கண்ணிவெடி தாக்குதல் ஆகியவைகளால் பாதிக்கப்படும் மக்கள் அல்லது பாதிக்கப்படுவோரின் குடும்பத்தினர் மத்திய அரசின் திட்டத்தின்கீழ் நிதி உதவி பெற விரும்பினால் ஆதார் எண் அல்லது ஆதார் எண்ணுக்கு விண்ணப்பித்து இருப்பதற்கான அங்கீகாரம் ஆகியவை கட்டாயமாக்கப்படுகிறது.
தகுதியுள்ள பயனாளிகள் ஆதார் எண் பெற்றிருக்கவில்லை என்றாலோ, ஆதார் எண்ணுக்கு விண்ணப்பிக்கவில்லை என்றாலோ ஆதார் எண்ணுக்கு விண்ணப்பிக்க வேண்டும்.
அனைவருக்கும் ஆதார் வழங்கப்படாத அசாம், மேகாலயா மாநிலங்கள் தவிர மற்ற அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் இந்த உத்தரவு உடனடியாக அமலுக்கு வருகிறது.
பயனாளி வசிக்கும் வட்டாரம் அல்லது தாலுகாவில் ஆதார் கணக்கெடுப்பு மையம் இல்லை என்றால், அவருக்கு ஆதார் எண் ஒதுக்கப்படும் வரை அவர் வங்கி அல்லது தபால் அலுவலக பாஸ்புத்தகம், வாக்காளர் அடையாள அட்டை, பான் அட்டை, ரேஷன் கார்டு, பாஸ்போர்ட் போன்ற புகைப்படத்துடன் கூடிய அரசின் அடையாள ஆவணங்கள் ஏதாவது ஒன்றை தாக்கல் செய்ய வேண்டும்.
இந்த திட்டத்தை செயல்படுத்தும் அலுவலகம் ஆதார் எண்ணின் தேவை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஊடகங்கள் மூலம் விரிவான விளம்பரம் செய்ய வேண்டும். ஒருவேளை பயனாளியின் கைரேகை அல்லது அடையாளங்கள் சரியாக பதிவாகவில்லை என்றால் திட்டத்தை செயல்படுத்தும் அலுவலகம் வசதியான இடத்தில் அடையாளங்களை பதிவு செய்யலாம். அதுவும் வெற்றிபெறவில்லை என்றால் ஒரு முறை பயன்படுத்தும் கடவுச்சொல் மற்றும் கியூ ஆர் கோடு மூலம் அங்கீகாரம் வழங்கலாம். இவ்வாறு அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.
இந்த நிதி உதவியை அந்தந்த மாநில அரசுகளே வழங்கும். பின்னர் மாநில அரசுகள் வழங்கிய தொகை குறித்து மத்திய உள்துறை அமைச்சகத்திடம் தெரிவித்த பின்னர் அந்த தொகை மாநில அரசுகளுக்கு திரும்ப வழங்கப்படும். இந்த திட்டத்துக்கு ஆண்டுக்கு ரூ.6 முதல் ரூ.7 கோடி வரை ஆகும் என உள்துறை அமைச்சக அதிகாரி ஒருவர் கூறினார்.