சண்டிகார்,
காங்கிரஸ் ஆளும் பஞ்சாபில் மின் கட்டணம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. எனவே தனியாரிடம் இருந்து மின்சாரம் வாங்குவதற்கு வகை செய்யும் ஒப்பந்தங்களை ரத்து செய்ய வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. இதை நிறைவேற்றாவிட்டால் முதல்-மந்திரி வீட்டுக்கு மின்சார வினியோகம் தடை செய்யப்படும் என ஆம் ஆத்மி கட்சி மிரட்டியுள்ளது.
இதுதொடர்பாக கட்சியின் மாநில தலைவரும், எம்.பி.யுமான பகவந்த் மன் கூறுகையில், தனியார் அனல் மின் நிலையங்களுடன் மாநில அரசு ரகசிய உடன்பாடு செய்துள்ளது. இதனால்தான் ஆட்சிக்கு வந்து 3 ஆண்டுகள் கடந்த பின்னரும் தனியார் மின் நிறுவனங்களின் கணக்கு தணிக்கை விவரங்களை கேட்கவோ, அவர்களுடனான ஒப்பந்தத்தை ரத்து செய்யவோ இல்லை என்று குற்றம் சாட்டினார்.
இந்த ஒப்பந்தங்களை ரத்து செய்வதற்கு முதல்-மந்திரி அமரீந்தர் சிங்கிற்கு பொன்னான வாய்ப்பாக நடப்பு பட்ஜெட் கூட்டத்தொடர் அமைந்திருப்பதாக கூறிய அவர், இந்த தொடரில் மேற்படி ஒப்பந்தங்களை ரத்து செய்யாவிட்டால், அவரது வீட்டுக்கு அடுத்த மாதம் (மார்ச்) 16-ந்தேதி மின்சார வினியோகத்தை தடை செய்வோம் என்றும் தெரிவித்தார்.