புதுடெல்லி,
வன்கொடுமைக்கு ஆளாகும் தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் எஸ்.சி., எஸ்.டி. வன்கொடுமை சட்டத்தின் கீழ் புகார்கள் அளித்தால் சம்பந்தப்பட்டவரை உடனடியாக கைது செய்யக்கூடாது என்றும், போலீஸ் அதிகாரிகள் விசாரணை நடத்தி முகாந்திரம் இருந்தால் கைது செய்யலாம் என்றும் சுப்ரீம் கோர்ட்டு கடந்த மாதம் உத்தரவிட்டது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வட மாநிலங்களில் போராட்டங்கள் நடந்தன. இந்த போராட்டம் வன்முறையில் முடிந்தது. இதில் பலர் உயிர் இழந்தனர்.
இந்நிலையில் வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் கொண்டு வரப்பட்ட திருத்தங்களை வாபஸ் பெறக்கோரி மத்திய அரசு சுப்ரீம் கோர்ட்டில் மறுசீராய்வு மனுதாக்கல் செய்தது. அதில், சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு, இச்சட்டத்தை நீர்த்து போக செய்துள்ளது என்று குறிப்பிட்டு இருந்தது.
அதை தொடர்ந்து தற்போது பா.ஜனதா ஆளும் சத்தீஸ்கார், மத்தியபிரதேசம், ராஜஸ்தான் அரசுகள் சுப்ரீம் கோர்ட்டில் மறுசீராய்வு மனுதாக்கல் செய்ய முடிவு செய்துள்ளன. விரைவில் மறுசீராய்வு மனு தாக்கல் செய்யப்படும் என்று சத்தீஸ்கார் மாநில முதல்மந்திரி ராமன்சிங் நேற்று தெரிவித்தார்.