சென்னை,
சென்னை கொளத்தூர் நகைக்கடை கொள்ளை வழக்கில் முக்கிய குற்றவாளியான கொள்ளையன் நாதுராம் என்பவரை கைது செய்ய தனிப்படை போலீசார் ராஜஸ்தான் மாநிலம் சென்றபோது தனிப்படையில் இடம் பெற்றிருந்த சென்னை மதுரவாயல் இன்ஸ்பெக்டர் பெரியபாண்டியன் துப்பாக்கி சூட்டில் பலியாகி விட்டார்.
அவருடன் சென்றிருந்த இன்னொரு போலீஸ் இன்ஸ்பெக்டர் முனிசேகர், கொள்ளையன் நாதுராமை சுட்ட குண்டு குறிதவறி, இன்ஸ்பெக்டர் பெரிய பாண்டியன் மீது பட்டு அவர் உயிர்ப்பலியாகி விட்டார். இன்ஸ்பெக்டர் முனிசேகரே இதை ஒப்புக்கொண்டுவிட்டார்.
இருந்தாலும், கொள்ளையர்களை பிடிக்கச்சென்ற போது, ஆய்வாளர் பெரியபாண்டியன் துப்பாக்கி குண்டு பாய்ந்து பலியான சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த வழக்கு, ராஜஸ்தான் மாநில போலீசாருக்கும் கடும் நெருக்கடியை ஏற்படுத்தியது. இதையடுத்து, தனிப்படை அமைத்து ராஜஸ்தான் மாநில போலீசாரும் கொள்ளை வழக்கில் முக்கிய குற்றவாளியான நாதுராமை தீவிரமாக தேடி வந்தனர்.
கொள்ளையன் நாதுராமின் முகநூல் பக்கத்தில், கையில் துப்பாக்கியுடன் நாதுராம் இருப்பது போன்ற புகைப்படம் அண்மையில் வெளியாகி உள்ளது. இது மேலும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில், குஜராத்தில் பதுங்கியிருந்த கொள்ளையன் நாதுராமை ராஜஸ்தான் மாநில போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர். பாலி மாவட்ட எஸ்.பி. தீபக் பார்கவ் தந்தி டிவிக்கு அளித்த தகவலில் இதை தெரிவித்துள்ளார். #periyapandian | #Rajasthan | #chennai