புதுடெல்லி,
கிரிக்கெட் வீரர் எம்.எஸ். தோனியின் வாழ்க்கை வரலாறு படத்தில் நடித்து பிரபலமான 34 வயதான இந்தி நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் கடந்த ஜூன் மாதம் 14-ந்தேதி மும்பை பாந்திராவில் உள்ள தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக மும்பை போலீசார் சுஷாந்த் சிங்கின் காதலியும், நடிகையுமான ரியா சக்ரபோர்த்தி மற்றும் திரையுலகை சேர்ந்தவர்கள் உள்பட 50-க்கும் மேற்பட்டவர்களிடம் விசாரணை நடத்தி வாக்குமூலம் பதிவு செய்தனர்.
இந்த நிலையில், சுஷாந்த் சிங்கின் தந்தை கிருஷ்ணா கிஷோர் சிங், பீகார் மாநிலம் பாட்னா போலீசில் நடிகை ரியா சக்ரபோர்த்தி மீது புகார் அளித்தார். இந்த வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்ற வேண்டும் என்று பீகார் மாநில அரசு, மத்திய அரசுக்கு பரிந்துரை செய்தது. இதற்கு மராட்டிய அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்து இருந்தது.
இந்தநிலையில், பாட்னா போலீசில் தன் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கை மும்பைக்கு மாற்றக்கோரி நடிகை ரியா சக்ரபோர்த்தி சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்த மனு நீதிபதி ரிஷிகேஷ் ராய் தலைமையிலான காணொலி அமர்வில் நடைபெற்று வந்தது.
இந்த வழக்கின் மீதான விசாரணை முடிவடைந்த நிலையில் நேற்று, நடிகர் சுஷாந்த் சிங் மரணம் தொடர்பான வழக்கை சி.பி.ஐ விசாரிக்க வேண்டும் என நீதிபதிகள் அதிரடி தீர்ப்பு கூறினார்கள். மராட்டிய அரசு மற்றும் மும்பை போலீசார் இந்த வழக்கின் விசாரணைக்கு தேவையான அனைத்து வித உதவிகளையும், ஒத்துழைப்பையும் அளிக்க வேண்டும்.
சுஷாந்த் சிங் மரணம் தொடர்பான அனைத்து ஆவணங்களையும் சி.பி.ஐ.யிடம் வழங்க வேண்டும். மேலும் சுஷாந்த் சிங் மரணம் தொடர்பாக வருங்காலத்தில் ஏதாவது வழக்கு பதியப்பட்டால் அதையும் சி.பி.ஐ. கையாள வேண்டும் என்றும் உத்தரவிட்டனர்.
அதேவேளையில் பீகார் மாநிலம் பாட்னாவில் நடிகை ரியா சக்ரபோர்த்திக்கு எதிராக பதியப்பட்ட முதல் தகவல் அறிக்கை சட்டபூர்வமானது என்றும் நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் தெரிவித்தனர்.