புதுடெல்லி,
பிரபல நடிகை ஜெயபிரதா (வயது 56). தமிழ், தெலுங்கு, இந்தி என பல மொழி படங்களில் நடித்து புகழ் பெற்றவர்.
இவர் ஆந்திராவில் என்.டி. ராமாராவ் தெலுங்குதேசம் கட்சியை தொடங்கியபோது, அவரது அழைப்பின் பேரில் அந்தக் கட்சியில் சேர்ந்தார். அவரது மறைவுக்கு பின்னர் சந்திரபாபு நாயுடு தலைவரானபோது அவருக்கும், ஜெயபிரதாவுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து ஜெயபிரதா, அந்தக் கட்சியில் இருந்து விலகி முலாயம் சிங் யாதவின் சமாஜ்வாடி கட்சியில் சேர்ந்தார்.
2004-ம் ஆண்டு நடந்த நாடாளுமன்ற தேர்தலில், உத்தரபிரதேச மாநிலம், ராம்பூர் தொகுதியில் சமாஜ்வாடி கட்சி சார்பில் போட்டியிட்டு வென்றார். 2009 தேர்தலிலும் போட்டியிட்டார்.
ஆனால் அவரது ஆபாச படங்களை சமாஜ்வாடி கட்சியின் மூத்த தலைவர் அசம் கான் வினியோகித்தார் என புகார் எழுப்பி சர்ச்சையை ஏற்படுத்தினார். இருந்தபோதும், அந்த தேர்தலிலும் அவர் வெற்றி பெற்றார்.
ஆனால் கட்சி விரோத நடவடிக்கை என்ற பெயரால் அவர் சமாஜ்வாடி கட்சியில் இருந்து நீக்கப்பட்டார்.
அதைத் தொடர்ந்து 2011-ல் அமர்சிங் தொடங்கிய ராஷ்ட்ரிய லோக் மஞ்ச் கட்சியில் சேர்ந்தார். பின்னர் 2014-ம் ஆண்டு, அமர்சிங்குடன் அஜித் சிங்கின் ராஷ்ட்ரிய லோக்தளம் கட்சியில் சேர்ந்தார். 2014 நாடாளுமன்ற தேர்தலில் பிஜ்னோர் தொகுதியல் போட்டியிட்டு தோல்வியைத் தழுவினார்.
இந்த நிலையில் ஜெயபிரதா, டெல்லியில் உள்ள பாரதீய ஜனதா கட்சியின் தலைமை அலுவலகத்துக்கு நேற்று சென்றார்.
அங்கு கட்சியின் பொதுச்செயலாளர் பூபேந்தர் யாதவ் முன்னிலையில் அவர் பாரதீய ஜனதா கட்சியில் சேர்ந்தார். அவரை வரவேற்று பூபேந்தர் யாதவ் கூறும்போது, ஜெயபிரதா அரசியலில் நிறைய அனுபவம் வாய்ந்தவர் என குறிப்பிட்டார்.
ஜெயபிரதா கூறும்போது, என் வாழ்க்கையில் இது ஒரு முக்கியமான தருணம். சினிமா ஆகட்டும், அரசியல் ஆகட்டும் எதுவாக இருந்தாலும் நான் தேர்ந்தெடுத்ததை மனப்பூர்வமாக செய்தேன். என் வாழ்க்கையை அதற்காக அர்ப்பணித்தேன் என குறிப்பிட்டார்.
ஜெயபிரதா, இந்த நாடாளுமன்ற தேர்தலில் மீண்டும் ராம்பூர் தொகுதியில் பாரதீய ஜனதா கட்சி சார்பில் களம் இறங்குகிறார். அங்கு அவர் சமாஜ்வாடி கட்சியின் மூத்த தலைவர் அசம் கானை எதிர்த்து போட்டியிடுவார் என தகவல்கள் வெளியாகி உள்ளன.