ஐதராபாத்,
தமன்னா சமீபத்தில் விக்ரம் நடிப்பில் வெளியான ஸ்கெட்ச் படத்திலும் நடித்திருந்தார்.
இந்த நிலையில் ஐதராபாத்தின் ஹிம்யாத் நகரில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள நகைக்கடை ஒன்றை நடிகை தமன்னா நேற்று திறந்து வைத்தார். பின்னர் அவர் கடையில் இருந்து வெளியே வந்தபோது அங்கே நின்றிருந்த வாலிபர் ஒருவர் தமன்னாவை நோக்கி காலணியை வீசினார். அந்த காலணி தமன்னாவின் மீது படாமல் அருகில் நின்றிருந்த கடை ஊழியர் மீது விழுந்தது.
உடனே அங்கு பாதுகாப்புக்கு நின்றிருந்த போலீசார் அந்த நபரை பிடித்து விசாரணை நடத்தினர். இதில் அவரது பெயர் கரிமுல்லா என்றும், முசீராபாத்தை சேர்ந்த என்ஜினீயர் என்றும் தெரியவந்தது.
நடிகை தமன்னாவின் சமீபத்திய படங்களில் அவரது கதாபாத்திரங்கள் மீது ஏற்பட்ட அதிருப்தி காரணமாக இந்த செயலில் ஈடுபட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
இதைத்தொடர்ந்து கடை ஊழியர் அளித்த புகாரின் பேரில் கரிமுல்லாவை போலீசார் கைது செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.