லக்னோ,
உத்தரபிரதேசத்தின் சகாரன்பூர் தொகுதியில் போட்டியிடும் பா.ஜனதா வேட்பாளர் ராகவ் லகன்பாலை ஆதரித்து மாநில முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் பிரசாரம் செய்தார். அப்போது அந்த தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் இம்ரான் மசூத்தை சர்ச்சைக்குரிய வகையில் விமர்சித்தார்.
அவர் கூறுகையில், ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத அமைப்பு தலைவர் மசூத் அசாரின் மருகமன் (காங்கிரஸ் வேட்பாளர்) இந்த தொகுதிக்குள் நுழைந்து பயங்கரவாதியின் மொழிகளில் பேசி வருகிறார். புல்வாமா தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட மசூத் அசாரின் மொழிகளில் பேசுவோரை இந்த தேர்தலில் தோற்கடிக்க வேண்டும் என்று கூறினார்.
மேலும் பயங்கரவாதம் தொடர்பாக எதிர்க்கட்சிகளையும் அவர் கடுமையாக குற்றம் சாட்டினார். அவர் கூறும்போது, பயங்கரவாதிகளுக்கு பிரதமர் மோடியின் சிகிச்சை ஒன்றேயொன்று தான். அது, தோட்டாக்களும், வெடிகுண்டுகளுமே. ஆனால் சில கட்சிகள் பயங்கரவாதிகளுக்கு பிரியாணி வழங்குகின்றன என்று தெரிவித்தார்.
இதைப்போல சமாஜ்வாடி-பகுஜன் சமாஜ் கூட்டணி மற்றும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியையும் யோகி ஆதித்யநாத் கடுமையாக விமர்சித்து பேசினார்.