தேசிய செய்திகள்

40 நாட்களுக்கு பிறகு கொரோனா தினசரி பாதிப்பு 2 லட்சத்துக்கு கீழே வந்தது

இந்தியாவில் 40 நாட்களுக்கு பிறகு கொரோனா தொற்றின் தினசரி பாதிப்பு 2 லட்சத்துக்கு கீழே வந்துள்ளது. பலியும் கணிசமாக சரிந்துள்ளது.

தினத்தந்தி

2 லட்சத்துக்கு கீழே பாதிப்பு

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றின் 2-வது அலை உச்சக்கட்டமாக ஒரு நாளில் 4 லட்சத்துக்கு மேலாக பல நாட்கள் பதிவாகின. பின்னர் மெல்ல மெல்ல குறைந்து வந்தது. நாட்டில் பல்வேறு மாநிலங்களில் தளர்வில்லா ஊரடங்குகள், கடுமையான கட்டுப்பாடுகள் விதிப்பு, பொதுமக்களிடம் தற்போது ஏற்பட்டுள்ள விழிப்புணர்வு ஆகியவற்றின் நிமித்தமாக தொற்று பாதிப்பு தொடர்ந்து சரிவை சந்தித்து வந்தது.நேற்று முன்தினம் 2 லட்சத்து 22 ஆயிரத்து 315 பேர் தொற்று பாதிப்புக்குள்ளாகினர். நேற்று இந்த எண்ணிக்கை மேலும் சரிந்தது. 24 மணி நேரத்தில் 1 லட்சத்து 96 ஆயிரத்து 427 பேர் பாதிப்புக்கு ஆளாகி இருக்கிறார்கள்.கடைசியாக ஏப்ரல் 14-ந் தேதி தினசரி பாதிப்பு 1 லட்சத்து 84 ஆயிரத்து 372 ஆக பதிவானது. அதன்பின்னர் இப்போது 40 நாட்களுக்குப்பிறகு தினசரி பாதிப்பு 2 லட்சத்துக்கு கீழே வந்திருப்பது கவனத்தைக் கவர்வதாக அமைந்துள்ளது.நாட்டின் மொத்த பாதிப்பு 2 கோடியே 69 லட்சத்து 48 ஆயிரத்து 874 ஆக அதிகரித்துள்ளது.

5 மாநிலங்களில் பாதிப்பு அதிகம்

நேற்று காலை 8 மணியுடன் முடிந்த ஒரு நாளில் தமிழத்தில் அதிகபட்ச பாதிப்பு பதிவாகி உள்ளது. கர்நாடகத்தில் 25 ஆயிரத்து 311 பேரும், மராட்டியத்தில் 22 ஆயிரத்து 122 பேரும், மேற்கு வங்காளத்தில் 17 ஆயிரத்து 883 பேரும், கேரளாவில் 17 ஆயிரத்து 821 பேரும் தொற்றுக்கு ஆளாகி உள்ளனர்.இந்த 5 மாநிலங்களும் மொத்த பாதிப்பில் 60.07 சதவீத பாதிப்புகளை கொண்டுள்ளன.

பலியும் சரிந்தது

நேற்று முன்தினம் 4,454 பேர் கொரோனாவில் இருந்து மீள முடியாத நிலையில் உயிரிழந்தனர். நேற்று கொரோனாவால் ஏற்படுகிற உயிரிழப்பு கணிசமாக குறைந்துள்ளது. 24 மணி நேரத்தில் 3,511 பேர் மட்டுமே கொரோனாவால் பலியாகி உள்ளனர். இதனால் மொத்த பலி 3 லட்சத்து 7 ஆயிரத்து 231 ஆக அதிகரித்தது. 21 நாளுக்கு பிறகு இப்போதுதான் கொரோனா உயிர்ப்பலி 3,511 என்கிற அளவுக்கு குறைந்துள்ளது.மராட்டியத்தில் 592 பேர், கர்நாடகத்தில் 529 பேர், டெல்லியில் 207 பேர், கேரளாவில் 176 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா இறப்பு விகிதம் 1.14 சதவீதம் ஆகும்.

3.26 லட்சம் பேர் நலம்

நேற்று தொடர்ந்து 12-வது நாளாக தினசரி பாதிப்பின் அளவை விட மீட்பு அளவு அதிகமாக உள்ளது. அந்த வகையில் 1 லட்சத்து 96 ஆயிரத்து 427 பேர் பாதிப்புக்கு ஆளான நிலையில் கொரோனா தொற்றில் இருந்து நலம் அடைந்தோர் எண்ணிக்கை 3 லட்சத்து 26 ஆயிரத்து 850 ஆகும்.இதுவரை நலம் பெற்றவர்களின் மொத்த எண்ணிக்கையும் 2 கோடியே 40 லட்சத்து 54 ஆயிரத்து 861 ஆக உயர்ந்துள்ளது. மீட்பு விகிதமும் 89.26 சதவீதமாக அதிகரித்து இருக்கிறது.கர்நாடகத்தில் அதிகபட்சமாக 57 ஆயிரத்து 333 பேரும், மராட்டியத்தில் 42 ஆயிரத்து 320 பேரும், கேரளாவில் 36 ஆயிரத்து 39 பேரும் ஒரே நாளில் மீட்கப்பட்டுள்ளனர்.

25.86 லட்சம் பேர் சிகிச்சை

கொரோனா மீட்பு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை தொடர்ந்து இறங்குமுகம் கண்டு வருகிறது. நேற்று முன்தினத்துடன் ஒப்பிடுகையில் நேற்று இந்த எண்ணிக்கை 1 லட்சத்து 33 ஆயிரத்து 934 குறைந்து, 25 லட்சத்து 86 ஆயிரத்து 782 ஆக பதிவாகி உள்ளது.இது நாட்டின் மொத்தபாதிப்பில் 9.60 சதவீதம் ஆகும். இந்த புள்ளிவிவரங்களை மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

20.58 லட்சம் மாதிரிகள் பரிசோதனை

நேற்று முன்தினம் ஒரே நாளில் நாடெங்கும் 20 லட்சத்து 58 ஆயிரத்து 112 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன. இதனால் இதுவரை பரிசோதிக்கப்பட்டுள்ள மாதிரிகளின் மொத்த எண்ணிக்கை 33 கோடியே

25 லட்சத்து 94 ஆயிரத்து 176 ஆக அதிகரித்துள்ளது.

இந்த தகவலை இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது.

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது