புதுடெல்லி,
வேளாண் சட்டங்களை வாபஸ் பெறுவதாக பிரதமர் மோடி அறிவித்த நிலையில், மத்திய வேளாண் மந்திரி நரேந்திரசிங் தோமர் நேற்று தனது டுவிட்டர் பக்கத்தில் இது குறித்து பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-
வேளாண் சட்டங்களை ரத்து செய்யும் பிரதமரின் முடிவை வரவேற்கிறேன். வேளாண் துறையில் புரட்சிகரமான மாற்றங்களை செய்ய வேண்டும் என்ற தொலைநோக்கு பார்வையுடன் இந்த சட்டங்களை மோடி கொண்டு வந்தார். ஆனால் அவற்றில் விவசாயிகள் குறை காணும் சூழ்நிலை எழுந்தது. பேச்சுவார்த்தை மூலம் அவர்களுக்கு விளக்க முயன்றோம். ஆனால், சில விவசாய சங்கங்கள் ஏற்கும்படி செய்ய முடியாதது வருத்தம் அளிக்கிறது.
இந்த சட்டங்கள் நிச்சயமாக விவசாயிகளுக்கு பலன் அளித்திருக்கும். பிரதமர் மோடி, மற்றவற்றை விட தேசநலனையும், மக்கள் உணர்வுகளையும் பெரிதாக நினைப்பவர். எனவே, சகோதரத்துவ உணர்வுடன் அந்த சட்டங்களை வாபஸ் பெற்றுள்ளார்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.