மும்பை,
2024-25 ஆம் ஆண்டுக்கான மாநில கூடுதல் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. வருகிற அக்டோபரில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளதால் வாக்காளர்களை கவரும் வகையில் பட்ஜெட்டில் கவர்ச்சி திட்டங்கள் இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. அதன்படியே பட்ஜெட்டில் பல்வேறு நலத்திட்டங்கள் தொடர்பான அறிவிப்புகள் வெளியாகின. குறிப்பாக பெண்களுக்கு திட்டங்களை துணை முதல்-மந்திரி அஜித்பவார் அடுக்கினார்.
இதில் பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.1,500 உதவித்தொகை வழங்கும் திட்ட அறிவிப்பு முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. இதுதொடர்பாக பட்ஜெட்டில் கூறப்பட்டு இருந்ததாவது:- பெண்கள் குடும்பத்தின் தூணாக உள்ளனர். சமுதாயத்தின் மைய புள்ளியாக பெண்கள் உள்ளனர். பெண்கள் குடும்பத்தை கவனித்தும், வருவாய் ஈடுட்டவும் போராடி வருகின்றனர்.
பெண்கள் தனி ஆளாக குடும்பத்தை கவனித்து, குழந்தைகளை வெற்றிகரமாக வளர்த்ததையும் பார்த்து இருக்கிறோம். தேர்வு முடிவுகள் வரும் போது பெண்கள் முதல் இடங்களை பிடிப்பது எழுதப்படாத விதியாகி விட்டது. எனவே அவர்களை ஊக்குவிக்க வேண்டியது அரசின் கடமை. எனவே 21 முதல் 60 வயது வரை உள்ள தகுதியான பெண்களுக்கு மாநில அரசு மாதந்தோறும் ரூ.1,500 உதவித்தொகை வழங்க உள்ளது. இந்த திட்டத்துக்காக ரூ.46 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட உள்ளது. இந்த திட்டம் அடுத்த மாதம் (ஜூலை) முதலே அமலுக்கு கொண்டு வரப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.