தேசிய செய்திகள்

சாட்ஜிபிடி உதவியுடன் செருப்பை கண்டுபிடித்த இளைஞர் - வைரல்

கோவில் ஒன்றுக்கு சென்ற இளைஞர், வாசலில் தனது செருப்பை கழற்றி வைத்துள்ளார்.

உஜ்ஜைனி,

மத்திய பிரதேசத்தில் கோவில் வாசலில் குவிந்து கிடந்த ஏராளமான காலணிகளுக்கு மத்தியில், தனது செருப்பைத் தேடி கண்டுபிடிக்க முடியாமல் தவித்த இளைஞர், சாட்ஜிபிடியின் உதவியுடன் தனது காலணியை எளிதாகக் கண்டுபிடித்த சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

காலணிகளுக்கு மத்தியில் சிக்கல்

மத்திய பிரதேசத்தின் உஜ்ஜைனியில் உள்ள கோவில் ஒன்றுக்கு சென்ற இளைஞர், வாசலில் தனது செருப்பை கழற்றி வைத்துள்ளார். வழிபாடு முடிந்து வெளியே வந்தபோது, அங்கு மலைபோல் குவிந்து கிடந்த ஏராளமான காலணிகளுக்கு மத்தியில் தனது செருப்பை கண்டுபிடிக்க முடியாமல் திணறியுள்ளார்.

சாட்ஜிபிடியிடம் உதவி

இதையடுத்து, தனது செருப்பின் மாடல் மற்றும் தோற்றம் தெளிவாகத் தெரியும் வகையில் அதன் புகைப்படத்தை சாட்ஜிபிடியில் பதிவேற்றியுள்ளார். பின்னர் கோவில் வாசலில் குவிந்திருந்த செருப்புகளை வீடியோவாக பதிவு செய்து, அதையும் சாட்ஜிபிடியில் பதிவேற்றியுள்ளார்.

செருப்பு கண்டுபிடிப்பு

அந்த வீடியோவில் தனது செருப்பை தேடி கண்டுபிடிக்குமாறு சாட்ஜிபிடியிடம் கேட்டுள்ளார். வீடியோவில் இருந்த ஏராளமான காலணிகளை ஆய்வு செய்த சாட்ஜிபிடி, இளைஞர் முன்பு பதிவேற்றியிருந்த செருப்பின் புகைப்படத்துடன் ஒப்பிட்டு, அவரது செருப்பு இருக்கும் இடத்தை சுட்டிக்காட்டியதாக கூறப்படுகிறது. சாட்ஜிபிடி காட்டிய இடத்தில் தேடியபோது, இளைஞர் தனது செருப்பை கண்டுபிடித்ததாக தெரிகிறது.