புதுடெல்லி,
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. முன்னாள் பிரதமர் வாஜ்பாய், மக்களவை முன்னாள் சபாநாயகர் சோம்நாத் சாட்டர்ஜி, நாடாளுமன்ற விவகாரங்கள் துறை மந்திரி அனந்தகுமார் ஆகியோருக்கு அஞ்சலி செலுத்தி விட்டு இரு சபைகளும் நாள் முழுக்க ஒத்தி வைக்கப்பட்டன.
விசுவரூபம் எடுத்து வரும் ராமர் கோவில் விவகாரம், பெரும் பரபரப்பை ஏற்படுத்திய 5 மாநில சட்டசபை தேர்தல் முடிவுகள், ரபேல் போர் விமான பேரம், ராபர்ட் வதேராவுக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறையினர் அதிரடி சோதனைகள் நடத்திய விவகாரம் என நாட்டின் அரசியல் சூழல் பரபரப்பாகி உள்ளது.
இந்த கூட்டத்தொடர் அடுத்த மாதம் 8ந்தேதி முடியும். அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடக்க உள்ள நிலையில், இதுவே முழுமையான கூட்டத்தொடர் என்பதால் முக்கியத்துவம் பெற்றுள்ளது
இந்த நிலையில், மேகதாது அணை திட்டத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் தமிழக அரசு, தமிழக சட்டசபையில் தீர்மானமும் நிறைவேற்றியது. இந்த விவகாரத்தில் அ.தி.மு.க. நாடாளுமன்றத்தில் இன்று ஒத்தி வைப்பு தீர்மானம் கொண்டு வந்தது. இதற்காக இரு அவைகளிலும் மேகதாது விவகாரம் குறித்து விவாதிக்க கோரி அ.தி.மு.க. நோட்டீஸ் தந்தது.
இதனை தொடர்ந்து, மேகதாது விவகாரத்தில் அ.தி.மு.க. எம்.பி.க்கள் இன்று அமளியில் ஈடுபட்டனர். இதனால் அவை நடவடிக்கைகள் முடங்கின. இதனை அடுத்து மாநிலங்களவை 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டு உள்ளது.