எய்ம்ஸ் நிறுவன தினம்
டெல்லி எய்ம்ஸ் ஆஸ்பத்திரியின் 66-வது நிறுவன தினத்தையொட்டி அங்கு நேற்று நடந்த சிறப்பு நிகழ்ச்சியில் மத்திய சுகாதார மந்திரி மன்சுக் மாண்டவியா கலந்து கொண்டார்.இந்த நிகழ்ச்சியில் சிறப்புரையாற்றிய அவர், டாக்டர்களுக்கு பல்வேறு வேண்டுகோளை விடுத்தார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-
கலங்கரை விளக்கம்
கடலில் கப்பல்களுக்கு வழிகாட்டும் கலங்கரை விளக்கம் போல, சுகாதாரத்துறையில் நவீன சிகிச்சை மற்றும் தொழில்நுட்பத்துக்கு எய்ம்ஸ் ஆஸ்பத்திரி வழிகாட்டியாக திகழ்கிறது. உண்மையில் நாட்டின் சுகாதாரத்துறைக்கு எய்ம்ஸ்தான் கலங்கரை விளக்கம்.நான் சுகாதார மந்திரியான பிறகு இங்கு (எய்ம்ஸ்) பலமுறை வந்தபோது, இங்குள்ள டாக்டர்கள் நோய்களை கண்டறிதல், சிகிச்சை அளித்தல் போன்றவற்றில் வெற்றிகரமாக செயல்படுவதை கண்டறிந்தேன்.ஆனால் நாம் இத்துடன் நிறுத்தக்கூடாது. முழுமையான நோயாளி பராமரிப்பு மற்றும் மேலாண்மையை இறுதி இலக்காக டாக்டர்கள் வைத்திருக்க வேண்டும். நோய் கண்டறிதல் மற்றும் சிகிச்சையுடன், நோயாளிகளின் மன திருப்திக்காகவும் டாக்டர்கள் உழைக்க வேண்டும்.
நாட்டுக்கு ஆற்றும் சேவை
நாட்டுக்கு சேவையாற்றுவதற்கு பல வழிகள் உள்ளன. அதில் மக்களின் உடல்நலத்தை உறுதி செய்வதும் ஒரு சிறந்த வழியாகும். அந்தவகையில் இங்கு பணியாற்றும் டாக்டர்கள் நாட்டுக்காக உழைக்கும் உணர்வை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும். நலமான குடிமக்களால் ஒரு ஆக்கப்பூர்வமான இந்தியாவை உருவாக்க முடியும். குடிமக்கள் சிறந்த உடல் நலத்துடன் இல்லாவிட்டால் ஒட்டுமொத்த வளர்ச்சியை ஒரு நாடு எட்ட முடியாது. எனவே சிறந்த சிகிச்சை மூலம் குடிமக்களின் உடல் நலத்தை உறுதி செய்யும் டாக்டர்கள் அனைவரும் உண்மையில் தேசபற்றாளர்கள் ஆவர்.
இவ்வாறு மன்சுக் மாண்டவியா கூறினார்.