லே,
லடாக்கில் இந்திய-சீன ராணுவ வீரர்களிடையே மீண்டும் பதற்றம் எழுந்துள்ளது. இந்த நிலையில் இந்திய விமானப்படை தளபதி வி.ஆர்.சவுத்ரி, லடாக் யூனியன் பிரதேசத்தில் லே பகுதியில் உள்ள விமானப்படை தளத்துக்கு நேரில் சென்றார். அங்கு குவிக்கப்பட்டுள்ள விமானப்படை வீரர்களை நேரில் சந்தித்து அவர்களுடன் உரையாடினார்.
அப்போது இந்திய விமானப்படையின் தயார்நிலை குறித்து வி.ஆர்.சவுத்ரி ஆய்வு செய்தார். இதன் பின்னர் பேசிய அவர், தானியங்கி, தரவு பகுப்பாய்வு மற்றும் செயற்கை நுண்ணறிவு ஆகியவற்றின் திறன்களை எதிர்காலப் போர்களில் பயன்படுத்த பல திட்டங்கள் சிறப்பாக நடந்து கொண்டிருக்கின்றன என்பதை நான் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன், என்று கூறினார்.
மேலும் காலத்திற்கு ஏற்றவாறு உயர் தொழில்நுட்பத்தில் தன்னிறைவு பெறுவதற்கு, நம்மிடம் உள்ள தொழில்நுட்பத்தை மறுபரிசீலனை செய்து சீரமைக்க வேண்டியது அவசியம் ஆகும் என்று குறிப்பிட்ட அவர், விமானப்படையில் சேரும் இளைஞர்கள் மற்றும் பெண்கள் மிகவும் திறமையானவர்கள் என்றும் இன்றைய டிஜிட்டல் உலகத்தைப் பற்றி நன்கு அறிந்தவர்கள் என்றும் கூறினார்.