தேசிய செய்திகள்

விமானப்படை விமானம் விபத்துக்குள்ளான பகுதி: மீட்பு பணிக்கு சென்ற வீரர்களை திரும்ப அழைத்து வருவதில் சிக்கல் நீடிப்பு

விமானப்படை விமானம் விபத்துக்குள்ளான பகுதியில் மீட்பு பணிக்கு சென்ற வீரர்களை திரும்ப அழைத்து வருவதில் சிக்கல் நீடித்து வருகிறது. இதனால் 17 நாட்களாக மலையிலேயே அவர்கள் தங்கியிருக்கின்றனர்.

தினத்தந்தி

இடாநகர்,

இந்திய விமானப்படைக்கு சொந்தமான ஏ.என்.32 ரக விமானம் ஒன்று கடந்த 3-ந் தேதி அசாமின் ஜோர்காட் விமானப்படை தளத்தில் இருந்து அருணாசல பிரதேசத்தின் மென்சுகா பகுதிக்கு புறப்பட்டது. இந்த விமானம் கிளம்பிய மணி நேரத்தில் அருணாசல பிரதேசத்தின் சியாங்-சியோமி மாவட்ட எல்லைப்பகுதியில் விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானது.

இந்த கோர விபத்தில் விமானத்தில் இருந்த விமானப்படை அதிகாரிகள் உள்பட 13 வீரர்களும் பலியாகினர். கடல் மட்டத்தில் இருந்து 12 ஆயிரம் அடி உயர மலைப்பாங்கான பகுதியில் விமானம் விழுந்து நொறுங்கியதால் அதை கண்டுபிடிப்பதில் மிகப்பெரும் சிக்கல் நிலவியது. இதனால் 8 நாட்களுக்கு பின்னரே விமானத்தின் பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்டன.

இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் உடலை மீட்பதற்காக விமானப்படை மற்றும் உள்ளூரை சேர்ந்த மலையேற்ற வீரர்கள் அடங்கிய மீட்புக்குழுவினர் 12 பேர் சம்பவ இடத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டனர். இவர்கள் கடந்த 13-ந் தேதி அந்த பகுதியை சென்றடைந்தனர்.

அன்று முதல் அவர்கள் உடல்களை மீட்கும் பணிகளை தொடங்கினர். ஆனால் அந்த பகுதி மலைப்பாங்கான இடம் என்பதாலும், தொடர்ந்து அங்கு மழை பெய்து மோசமான வானிலை நீடித்ததாலும் உடல்களை மீட்பதில் பெரும் சிக்கல் நீடித்தது. எனினும் 13 பேரின் உடல்களும் மீட்கப்பட்டு கடந்த 19 மற்றும் 20-ந் தேதிகளில் ஹெலிகாப்டர் மூலம் அனுப்பிவைக்கப்பட்டன. அத்துடன் விமானத்தின் கருப்பு பெட்டியும் மீட்டு அனுப்பப்பட்டது.

இந்த பணிகளை முடித்தபின் மீட்புக்குழுவினர் அனைவரும் திரும்பி வர ஆயத்தமாகினர். அவர்களை அழைத்து வருவதற்காக ஹெலிகாப்டர்களும் அனுப்பிவைக்கப்பட்டன. ஆனால் சம்பவ இடத்தில் கடும் மேகமூட்டம், கனமழை என தொடர்ந்து மோசமான வானிலை நிலவியதால் அவர்களை மீட்க முடியவில்லை.

அவர்களை அழைத்து வருவதற்காக செல்லும் ஹெலிகாப்டர்கள் அனைத்தும், தரையிறங்க முடியாமலும், வீரர்களை மேலே ஏற்ற முடியாமலும் தொடர்ந்து திரும்பி வருகின்றன. மேலும் வீரர்கள் இருக் கும் பகுதி கரடுமுரடான, மலைப்பாங்கான இடம் என்ப தாலும், தொடர்ந்து மழை பெய்து வருவதாலும், வீரர்களால் மலையில் இருந்து கீழேயும் இறங்கி வரமுடியாத நிலை உள்ளது.

இதனால் மீட்புக்குழுவில் உள்ள 12 பேரும் கடந்த 17 நாட்களாக அந்த மலைப்பகுதியிலேயே தங்கியிருக்கின்றனர். அவர்களுக்கு தேவையான உணவு மற்றும் அத்தியாவசிய பொருட்களை விமானப்படை வீரர்கள் ஹெலிகாப் டர்களில் கொண்டு சென்று போட்டு வருகின்றனர்.

மேலும் செயற்கைகோள் போன் மூலமாக அந்த வீரர்களிடம் விமானப்படை அதிகாரிகள் தொடர்ந்து பேசி அவர்களை ஊக்கமூட்டி வருவதாக கூறியுள்ள விமானப்படை, சம்பவ இடத்தில் மழை கொஞ்சம் ஓய்ந்தாலும் உடனடியாக அவர்கள் மீட்டு திரும்ப அழைத்து வரப்படுவார்கள் என கூறியுள்ளது.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து