புதுடெல்லி,
பொதுத்துறை விமான சேவை நிறுவனமான ஏர் இந்தியா பல்லாயிரம் கோடி ரூபாய் நஷ்டத்தில் இயங்கி வந்தது. அந்த நிறுவனத்தை தற்போது டாடா நிறுவனம் கையகப்படுத்தி உள்ளது.
மக்களவையில் நேற்று கேள்வி நேரத்தின்போது, இதையொட்டி கேட்கப்பட்ட ஒரு கேள்விக்கு சிவில் விமான போக்குவரத்து மந்திரி ஜோதிர் ஆதித்ய சிந்தியா பதில் அளித்தார்.
அப்போது அவர், ஏர் இந்தியா 2020-21-ல் ரூ.9,373 கோடி இழப்பையும், 2021-22-ல் (டிசம்பர் 2021 வரை) ரூ.6,927 கோடி இழப்பையும் சந்தித்தது. அதன் துணை நிறுவனமான ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் 2020-21-ல் ரூ.184 கோடி லாபத்தையும், 2021-22-ல் (டிசம்பர் 2021 வரை) ரூ.161 கோடி இழப்பையும் சந்தித்தது.
மற்றொரு துணை நிறுவனமான அலையன்ஸ் ஏர் மேற்கூறிய கால கட்டத்தில் முறையே ரூ.440 கோடி மற்றும் ரூ.315 கோடி இழப்பையும் சந்தித்தது என கூறினார். ஏர் இந்தியா குழுமம் மொத்த இழப்பு ரூ.17 ஆயிரத்து 32 கோடி ஆகும்.