புதுடெல்லி
இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவல் உச்சத்தில் உள்ளது. இதனால், பல்வேறு நாடுகள் இந்தியாவுடனான விமான சேவைகளை ரத்து செய்துள்ளன. இந்த நிலையில், ஆஸ்திரேலியாவும் இந்தியாவில் இருந்து வரும் நேரடி பயணிகள் விமானங்களுக்கு வரும் மே 15 ஆம் தேதி வரை தடை விதித்துள்ளது.
ஆஸ்திரேலியாவின் பிரதமர் ஸ்காட் மாரிசன் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். ஆஸ்திரேலிய அரசின் இந்த அறிவிப்பால் இந்தியாவில் உள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்கள் உள்பட ஆயிரக்கணக்கான ஆஸ்திரேலிய நாட்டு மக்கள் உடனடியாக நாடு திரும்ப முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் இன்று சிட்னியில் இருந்து ஏர் இந்திய விமானம் டெல்லி புறப்பட தயாராக இருந்தது. புறப்படுவதற்கு முன்னர் அனைத்து விமான ஊழியர்களும் கொரோனா சோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். ஒருவருக்கு மட்டும் கொரோனா தொற்று உறுதியானதை தொடர்ந்து அவர் சிட்னியில் தனிமைப்படுத்தப்பட்டார்.
இதன் விளைவாக, ஆஸ்திரேலிய அதிகாரிகள் பயணிகளை ஏற்றிச் செல்வதைத் தடுத்தனர், மேலும் அது சரக்கு மற்றும் மீதமுள்ள ஊழியர்களுடன் காலியாக திரும்ப வேண்டியிருந்தது.
ஏர் இந்தியா ஆஸ்திரேலியாவுக்கு வாரத்திற்கு ஒரு விமானத்தை மட்டுமே பறக்கிறது, இது இரு நாடுகளுக்கும் இடையிலான ஒரே நேரடி விமானமாகும்.