தேசிய செய்திகள்

ஏர்செல் - மேக்சிஸ் முறைகேடு வழக்கில் ப.சிதம்பரம்- கார்த்தி சிதம்பரத்தை 11-ந் தேதி வரை கைது செய்ய தடை

ஏர்செல் - மேக்சிஸ் முறைகேடு வழக்கில் ப. சிதம்பரம் மற்றும் கார்த்தி சிதம்பரத்தை ஜனவரி 11-ந் தேதி வரை கைது செய்ய தடை விதித்து டெல்லி சிபிஐ நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.

புதுடெல்லி,

கடந்த 2006-ம் ஆண்டு காங்கிரஸ் ஆட்சியில் ப.சிதம்பரம் நிதியமைச்சராக இருந்த போது, ஏர்செல் நிறுவனத்தில் ரூ.3,500 கோடி முதலீடு செய்ய மலேசியாவை சேர்ந்த மேக்சிஸ் நிறுவனத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டது.

ரூ.600 கோடி வரை மட்டுமே முதலீடு செய்ய மத்திய நிதி அமைச்சகத்தால் அனுமதி அளிக்க முடியும் என்ற நிலையில், விதிகளை மீறி முதலீடு செய்ய அனுமதி வழங்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இதில் அனுமதி பெற்று கொடுக்க கார்த்தி சிதம்பரத்தின் நிறுவனம் முறைகேடாக பணம் பெற்றதாக சிபிஐ குற்றம் சாட்டியது.

சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கை அமலாக்கத்துறையும், ஏர்செல் - மேக்சிஸ் ஒப்பந்த வழக்கை சிபிஐயும் விசாரித்து வந்த நிலையில், கடந்த ஜூலை மாதம் 19-ம் தேதி சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது.

அந்த குற்றப்பத்திரிகையில் ப.சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் ஆகியோர் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டனர். இதையடுத்து சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கை விசாரித்து வந்த அமலாக்கத்துறை தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில் குற்றம் செய்ததற்கான முகாந்திரம் இருப்பதாக கூறியது.

இந்நிலையில், ஏர்செல் -மேக்சிஸ் முறைகேடு வழக்கில் ப.சிதம்பரத்தை கைது செய்ய டிசம்பர் 18-ம் தேதி வரை தடையை நீட்டித்து டெல்லி சிபிஐ தலைமை நீதிபதி ஓ.பி. சைனி உத்தரவிட்டு இருந்தார். இன்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது அப்போது ப.சிதம்பரம் மற்றும் கார்த்தி சிதம்பரத்தை கைது செய்ய ஜனவரி 11-ந் தேதி வரை தடைவிதித்து நீதிபதி உத்தரவிட்டார். மேலும் வழக்கு ஜனவரி 11-ந்தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

கடந்த ஆண்டில் 18 ஆயிரம் முகாம்கள் மூலம் 2.22 கோடி பேருக்கு வேலை - மத்திய அரசு தகவல்

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...